August 4, 2016

கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் புதிய இறங்குதுறை! நேரில் ஆராயவுள்ள டக்ளஸ்!

மயிலிட்டித் துறைமுகத்தினைக் கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பயன்பாட்டிற்காகப் பாவித்து வரும் நிலையில் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திற்கு அண்மையில் புதிய இறங்குதுறை அமைக்கப்படுவது தொடர்பில் ஆலய பக்தர்களும் கடற்றொழிலாளர்களும் விடுத்து கோரிக்கைக்கிணங்க குறித்த விடயம் தொடர்பாக தாம் நேரில் சென்று ஆராயவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்தில் வைத்து இன்று ஊடகவியலாளருக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்துரைத்த அவர்,

நீண்ட பாரம்பரியம் கொண்டதான மயிலிட்டித் துறைமுகம் கடந்த காலத்தில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து கடந்த பல வருடங்களாக கடற்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகின்றது.

இத்துறைமுகத்தை கடற்படையினரிடமிருந்து விடுவித்து தமது பாவனைக்குத் தரவேண்டுமென மயிலிட்டி கடற்தொழிலாளர்கள் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். இதுவரை கடற்றொழிலாளர்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமான முடிவுகளேதும் எட்டப்படாத நிலையே நீடிக்கிறது.

இந்நிலையில் மயிலிட்டித் துறைமுகத்தைக் கடற்படையினர் தமது பாவனைக்கெனப் பயன்படுத்தி வரும் அதேவேளை கடற்றொழிலாளர்களின் பாவனைக்கென கீரிமலை நகுலேஸ்வரம் புண்ணியபூமி வளாகத்தில் புதிய இறங்குதுறை அமைத்து அதனைக் கடற்றொழிலாளர்களின் பாவனைக்கெனக் கையளிப்பதற்கான நடவடிக்கைகளைக் கடற்படையினர் முன்னெடுத்து வருவதாக அறிய முடிகிறது.

கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு ஆலய நிர்வாகத்தினர், பக்தர்கள், கடற்றொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் தமது கண்டனங்களைத் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துறைசார்ந்தோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment