June 7, 2016

மரணப் போராட்டத்தில் ரவிச்சந்திரன்! காப்பாற்றுமா தமிழக அரசு?

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற அருப்புக்கோட்டை ரவிச்சந்திரன்,
மதுரை மத்திய சிறையில் நோய்வாய்ப்பட்டு மிகவும் சீரியஸான நிலையில் காலத்தைக் கழித்து வருகிறார்.

இவருக்கு முறையான சிகிச்சையளிக்க பரோலில் விடும்படி ரவிச்சந்திரனின் தாயார் இராஜேஸ்வரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்தார்.

வழக்குப் போட்ட நேரத்தில் மதுரை ஜி.ஹெச்-ல் ரவிச்சந்திரனுக்கு சாதாரண செக்கப் செய்துவிட்டு, சிகிச்சை அளித்துவிட்டோம் என்று நீதிமன்றத்தில் பதில் சொன்னது சிறைத்துறை.‘

ரவிச்சந்திரன் பலவிதமான நோய்களால் கஷ்டப்படுகிறார். அவருக்கு முறையான சிறப்பான சிகிச்சை அளிக்க சிறைக்குள்ளே வசதியில்லை. அவருக்கு முறையான தொடர் சிகிச்சை அளிக்கப்​படவில்லை.

சிகிச்சை அளிக்க பரோலில் விடவேண்டும் என்று இராஜேஸ்வரி அம்மாளின் வழக்கறிஞர்கள் லஜபதிராயும், திருமுருகனும் சமீபத்தில் நீதிமன்றத்தின் கவனத்துக்கு மீண்டும் கொண்டு வந்தனர்.

பரோலில் விடக் கூடாது என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தார்.

இதையடுத்து, மதுரை ஜி.ஹெச் டீன், ஒரு மருத்துவக் குழுவை அமைத்து, ரவிச்சந்திரனை முழுமையாகப் பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனை செய்த விவரத்தை அந்தக் குழு ஜூன் 20-ம் தேதி இந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

வழக்கறிஞர் லஜபதிராய் இது குறித்து கூறியதாவது,

ரவிச்சந்திரன் 25 வருடங்களாக சிறையில் இருந்து வருகிறார். சமீபகாலமாக அவர் உடல்நலம் மிகவும் மோசமாகிவிட்டது. அவருக்குத் தலைச்சுற்றல், திடீர் மயக்கம், தொடர்ச்சியான வயிற்றுவலி, மலச்சிக்கல் போன்ற வியாதிகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்.

இவரைக் குணமாக்க வேண்டுமென்றால் வெளியிலுள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க வேண்டும். இதைக் குறிப்பிட்டு, உள்துறைச் செயலாளர், சிறைத்துறை செயலாளர், சிறைத்துறை ஏ.டி.ஜி.பி., சிறைத்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ரவிச்சந்திரனின் தாயார் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி மனு அனுப்பினார்.

ஆனால், அந்த மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் அடிப்படையில்தான் அவருக்குச் சிகிச்சை அளிக்கக் கோரியிருந்தோம். ஆனால், அதிகாரிகள் அலட்சியமாக இருந்தனர். பிறகு வழக்குத் தாக்கல் செய்தோம்.

வழக்குப் போட்டவுடன், உடனே ஒரே ஒரு நாள் மட்டும் ஜி.ஹெச்-க்கு கூட்டி வந்து சிகிச்சை அளித்தனர். அதன்பின் தொடர் சிகிச்சைக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சிகிச்சைக்காக பரோலில் விடவேண்டி கோரிக்கை வைத்தோம் என்றார்.

அரசு காட்டும் அலட்சியத்தால் ரவிசந்திரனின் உயிருக்கு எதுவும் நேர்ந்து விடலாம் என்று அவரது உறவினர்கள் அஞ்சிக் கொண்டிருக்​​கிறார்கள்.இந்த நிலையில் அவரைக் காண கடந்த 4-ம் தேதி மதுரை மத்திய சிறைக்கு வைகோ வருகை தந்தார்.

அதுகுறித்து வைகோ தெரிவிக்கையில்,

ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டு அதைப் பற்றிய கடிதத்தை மத்திய அரசுக்கு அனுப்பியது.

அதை அப்போதைய காங்கிரஸ் அரசு எற்றுக்கொள்ளவில்லை. பி.ஜே.பி அரசும் தற்போது காங்கிரஸ் மனநிலையில்தான் உள்ளது.

சட்டவிதி 161-ஐ பயன்படுத்தி அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, தமிழக அரசு அந்த விதியைப் பயன்படுத்த வேண்டும்.

ஈழ விடுதலையை ஆதரித்ததுக்காக ரவிச்சந்திரன் 25 வருடங்கள் சிறையில் வாடுகிறார். அவர் உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு நரக வேதனையை அனுபவித்து வருகிறார்.

அவருக்கு ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டது. அவருக்கு நல்ல உணவும், சிறப்பான சிகிச்சையும் அளிக்க வேண்டும்.

ரவிச்சந்திரன் உட்பட ஏழு பேரையும் மூன்று மாத கால அளவுக்காவது பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்றார் மிகவும் வேதனையுடன்.

ரவிச்சந்திரனை தமிழக அரசு காப்பாற்றுமா?

No comments:

Post a Comment