August 15, 2016

70வது சுதந்திர தினம்... செங்கோட்டையில் கொடியேற்றினார் மோடி - வரலாறு காணாத பாதுகாப்பு!

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இன்று கொடியேற்றினார். நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, தலைநகர் டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார். முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அத்வானி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

உளவுத்துறை தகவல்...

மோடியின் உயிருக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதாலும், சமீப காலமாக காஷ்மீர் எல்லை வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி அடிக்கடி நடைபெற்று வருவதாலும் மத்திய உளவுத்துறையினர், இந்த விழாவிற்கு மிக அதிகபட்ச பாதுகாப்பை அளிக்கும்படி கேட்டுக்கொண்டு உள்ளனர்.



வரலாறு காணாத பாதுகாப்பு...

இதனால் சுதந்திர தின விழா நடைபெறும் பகுதியில் வரலாறு காணாத அளவிற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.



கமாண்டோ படையினர்...

கடந்த ஒரு வாரமாக 'பாரத் பார்வ்' கலாசார நிகழ்ச்சி டெல்லி ராஜபாதையில் நடைபெற்று வந்தது. எனவே, தேசிய பாதுகாப்பு படையின் மறைந்திருந்து துப்பாக்கி சூடு நடத்தும் அதிரடிப்படை வீரர்கள், கமாண்டோ படையினர் கொண்ட ஒரு சிறப்பு குழு மைதானத்தின் உட்புற பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.



வான்வழிப் பாதுகாப்பு...

தரைப்பகுதி பாதுகாப்பு மட்டுமின்றி வான்வழியில் இருந்தும் டெல்லி சுதந்திர தின விழா கொண்டாட்டம் கண்காணிக்கப்படுகிறது. செங்கோட்டைப் பகுதியில் ஆள் இல்லாத குட்டி விமானங்கள் பறப்பது மற்றும் வான் வழியாக எறி பொருட்கள் வீசப்படுவது ஆகியவற்றை தடுக்கும் விதமாக விமான எதிர்ப்பு பீரங்கிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டு உள்ளன.



தடை...

வான்வழி நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு வசதியாக பாரா கிளைடிங், ஆள் இல்லாத பறக்கும் சிறிய வாகனங்கள், வெப்பக்காற்று பலூன்கள் ஆகியவற்றை டெல்லியில் பறக்க விடுவதற்கு ஏற்கனவே டெல்லி போலீசார், அக்டோபர் மாதம் 10-ந் தேதி வரை தடை விதித்துள்ளனர்.



கண்காணிப்பு தீவிரம்...

செங்கோட்டையை நோக்கியுள்ள கட்டிடங்களிலும் பாதுகாப்புக்காக போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். அங்குள்ள 605 பால்கனிகள் மற்றும் 104 கதவுகளும் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. அப்பகுதியில் உள்ள 3 ஆயிரம் மரங்களையும் கண்காணிப்பு பகுதியாக முகமையினர் அடையாளம் கண்டுள்ளனர்.



பயணிகளுக்குத் தடை...

 சுதந்திர தினவிழாவில் மோடி பங்கேற்றுவிட்டு செல்லும் வரை செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் நுழைவதும், அங்கிருந்து வெளியேறுவதும் தடை செய்யப்படுகிறது.

200 கேமராக்கள்...

பிரதமர் தனது இல்லத்தில் இருந்து புறப்பட்டு செங்கோட்டை வரும் பாதை வரை, சுமார் 200-க்கும் அதிகமான அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் 2 மின்கோபுர விளக்குகள் மூலம் 3 கட்டுப்பாட்டு அறைகளில் இருந்தவாறு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment