July 8, 2016

இன்னும் தொடரும் அவல வாழ்வு!

அரசாங்கத்தினால் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மலையகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் இன்னும் பல தோட்டங்கள் அபிவிருத்தி காணாத நிலையிலேயே காணப்படுகின்றன.


நானுஓயா, வங்கிஓயா தோட்டம் இதற்கு நல்லதொரு உதாரணம்.இத்தோட்டத்தில் 95 குடும்பங்களைச் சேர்ந்த 575 இற்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஆங்கிலேயர்களின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட லயன்களில் மக்கள் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விடயமாகும்.

வீடுகளில் வசதிகள் போதாததன் காரணமாக அதிகமான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்களின் சொந்தப் பணத்தில் தற்காலிக வீடுகள் அமைத்து எவ்விதமான அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

50 வருடங்களுக்கு மேலாக குடியிருப்பில் கூரைத் தகரம் மாற்றப்படவில்லை. இதன் காரணமாக கூரைத் தகரம் சல்லடை போல் காணப்படுகின்றது.

தற்போது இம்மக்கள் வசிக்கும் வீட்டின் கூரையின் மேல் கறுப்பு இறப்பர் விரிப்புகள் போடப்பட்டு மரங்கள் வைக்கப்பட்டுள்ளதுடன் மணல் மூடைகளும் வைக்கப்பட்டுள்ளன.

தற்போது மணல் மூடைகளில் புற்கள் வளர்ந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள வசதி வாய்ப்புகள் இருக்கின்ற போதிலும் இதுவரை காலமும் எவரும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லை.

தோட்டத்தில் வைத்தியர் ஒருவர் இருக்கின்ற போதிலும் சுகாதார வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருப்பதாகவும், இத்தோட்டத்திலிருந்து வைத்தியசாலைக்குச் செல்வதாக இருந்தால் 15 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு செல்ல வேண்டும் எனவும் மக்கள் கூறுகின்றனர்.

அம்புலன்ஸ் வண்டி இன்மையால் நோயாளர்கள்தோட்ட கொழுந்து ஏற்றும் லொறியில் கொண்டு செல்லப்படுகின்றனர். இதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.தோட்டத்தில் உள்ள வைத்தியசாலைக்குச் செல்வதாக இருந்தால் அது மிகவும் சிரமம் மிகுந்தது.

பாதை மிகவும் மோசமான நிலையில் உடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் குண்டும் குழியுமாகக் காணப்படுகின்றது.இத்தோட்டத்தில் இருந்து 10 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள நானுஓயா நகரப் பகுதி பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் போக்குவரத்து சேவை இன்மையால் பல இடர்களைச் சந்திக்கின்றனர்.

தேர்தல் காலங்களில் இத்தோட்டத்திற்குச் செல்லும் மலையக அரசியல்வாதிகள் இம்மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதாக வாக்குறுதிகள் வழங்குகின்ற போதிலும் இம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படவில்லையென விசனம் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment