July 8, 2016

ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! பொருளாதார மத்திய நிலையம் ஓமந்தையில் அமைய வேண்டும்!

வவுனியாவில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும். இதற்கு வன்னி மாவட்ட கூட்டமைப்பினர், ஒற்றுமையுடன் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வன்னி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இது தொடர்பில் அப்பகுதி விவசாயிகள் கருத்து தெரிவிக்கையில், வட பகுதிக்கான பொருளாதார மத்திய நிலையத்தை வவுனியாவில் அமைப்பதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எனினும் அதனை வவுனியாவின் தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என கடந்த பல மாதங்களாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.

மத்திய அரசாங்கம் ஓமந்தையில் அமைக்க ஆரம்பத்தில் மறுத்திருந்த போதும் தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவு செய்யும் இடத்தில் அமைக்க உறுதி மொழி வழங்கியுள்ளது.

இந்நிலையில் வடபகுதி விவசாயிகள் பலரும் ஓமந்தையில் இதனை அமைக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும், அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் இதனை தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் என கோரி வருகின்றனர்.

அதற்காக அவர்கள் பல காரணங்களையும் கூறுகின்றனர். முன்னர் நகரில் இருந்து 3 கிலோமீற்றர் தூரத்திற்குள் இருக்க வேண்டும் எனக் கூறி தாண்டிக்குளத்தை சிபார்சு செய்தனர்.

இடத்தை தெரிவு செய்து தாருங்கள் என அரசாங்கம், கூட்டமைப்பிடம் கூறியுள்ள நிலையில், ஓமந்தையில் உள்ள காணி பொருத்தமற்றது என இவர்கள் வாதாடி வருகிறார்கள்.

2010ஆம் ஆண்டு அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் ஆளுனர் சந்திரசிறி ஆகியோரின் இணைத்தலைமையில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு என ஓமந்தையில் 18 ஏக்கர் காணி ஒதுக்கப்பட்டது.

அதற்கான வரைபடங்கள் கூட தயாராகவுள்ளது. இந்நிலையில் அந்தக் காணிக்குள் புகையிரதக் கடவையை கடந்து போக வேண்டும் என கூறி அக்காணி பொருத்தமற்றது என தெரிவிக்கின்றனர்.

இது ஆரோக்கியமான வாதம் இல்லை. நாம் நாளாந்தம் பயணிக்கும் போது எத்தனை புகையிரதக் கடவைகளை கடக்கின்றோம்.

அதற்காக எமது வேலைகளையும், பயணத்தையும் நிறுத்துகின்றோமா? ஓமந்தையில் அமைக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் கூறும் காரணமே இது.

எனவே, இது தொடர்பில் உண்மை நிலையை அறிந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை ஓமந்தையில் விவசாயிகளின் விருப்பம் போல் பொருளாதார மத்திய நிலையத்தை அமைக்க முன்வரவேண்டும்.

நாம் வாக்களித்து மக்கள் பிரதிநிதிகளாக உங்களை தெரிவு செய்தது எமக்கு சேவை செய்யவும், எமக்காக குரல் கொடுக்கவுமே.

அதை உங்களால் செய்ய முடியாது என்றால் அமைதியாக இருந்து விடுங்கள். அதற்காக செய்பவர்களைக் குழப்பி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்.

இதற்காக பதில் சொல்ல வேண்டிய காலம் தொலைவில் இல்லை என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகின்றோம் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment