July 8, 2016

அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் யுத்தக்குற்ற விசாரணை! இலங்கை அரசாங்கம்!

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை செய்ய அடுத்த ஆண்டு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.


வெளிவிவகார அமைச்சர் மங்கள் சமரவீர் வெளியிட்டுள்ள கருத்தை மேற்கோள் காட்டி இந்திய ஊடகமான ”தி ஹிந்து” வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும் இடையில் 30 ஆண்டுகளாக யுத்தம் இடம்பெற்று வந்தது.

இந்நிலையில், 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் வரை கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல நாடுகளும், அமைப்புகளும் அழுத்தம் கொடுத்து வந்தன.

இதனையடுத்து சர்வதேச பங்களிப்புடன் கூடிய உள்ளக விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டணை பெற்றுக்கொடுப்பதாக இலங்கை அரசாங்கம் ஐ.நா சபையில் உறுதியளித்தது.

எனினும், அண்மையில் இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் கூட்ட தொடரின் போது இலங்கையில் யுத்தக்குற்றம் தொடர்பிலான விசாரணைகள் மந்த கதியில் இடம்பெறுவதாக ஐ.நா ஆணையாளர் தெரிவித்திருந்தார்.

இதனையடுத்து அண்மையில் நாடு திரும்பிய வெளிவிவகார அமைச்சர், கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்திருந்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த அவர், நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளது.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றம் குறித்து விசாரணை செய்வதற்கு சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்டம் தயாரிக்கப்படுகின்றது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்பித்து அனுமதி பெற்ற பின்னர், அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment