July 12, 2016

மீண்டுமொரு போராட்டத்திற்கு தயாராகும் முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள்!

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தங்கள் பூர்வீக வாழ்விட நிலங்களில் தமது மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி மீண்டுமொரு உண்ணாவிரதப் போரட்டம் ஆரம்பிக்கவுள்ளனர்.


இன்று மாலை 4.00 மணியவளில் கேப்பாபுலவு மாதிரிக்கிராம சித்தி விநாயகர் ஆலயத்தில் ஒன்றுகூடிய கிராம மக்கள் எதிர்வரும் 19ம் திகதி காலை 9.00 மணியில் இருந்து தமக்கு ஒரு நீதியான முடிவு கிடைக்கும் வரை உண்ணாவிரத போரட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

மூன்று மாதங்களில் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதான தமிழ் கட்சி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை அடுத்து மேற்படி முடிவு எடுத்துள்ளதாக சம்மந்தப்பட்ட பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா அகதிகள் முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கேப்பாப்புலவைச் சேர்ந்த 230 குடும்பங்கள், 2010 ஆம் ஆண்டு கேப்பாப்புலவு மாதிரி கிராமத்தில் குடியமர்த்தப்பட்டனர்.

குடியமர்த்தப்பட்ட இக் கிராம மக்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

இறுதியாக 3ம் மாதம் 23ம் திகதி ஆறுமுகம் வேலாயுதம் என்பவர் உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டார். மூன்றாம் நாள் வடமாகாண முதலமைச்சர் உண்ணவிரதத்தினை கைவிடுமாறும் மூன்று மாதத்தில் நல்லதொரு தீர்வை பெற்றுத்தருவதாக வடமாகண சபை உறுப்பினர் து.ரவிகரன் ஊடாக அறியத்தந்திருந்தார். இந்நிலையில் அறிவித்தலை ஏற்று உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.

தொடர்ந்து 4ம் மாதம் மாங்குளத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசாவின் ஏற்பாட்டில்முல்லைத்தீவு மாவட்ட மக்களுடனான சந்திப்பு நடைபெற்றது.

அதில் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் கேப்பப்புலவு மக்கள் பிரச்சினைகள் உடனடியாக தீர்க்கப்படும் என்று உறுதியளித்திருந்தார்.

எனினும் ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் இதுவரை நடைபெறவில்லை என இன்று கேப்பப்புலவு மக்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment