July 20, 2016

அரச படையினரை பழிவாங்கவே காணாமல்போனோர் பணியகம் -மஹிந்த ராஜபக்ச!

காணாமல்போனோர் விவகாரங்களை கையாள்வதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள பிரத்தியேக பணியகம் ஊடாக இராணுவம் உட்பட முப்படையினரை பழிவாங்க அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதியான குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தராஜபக்ச இன்று வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே இந்த குற்றச்சாட்டை முன்வைத்திருக்கின்றார்.

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து கூட்டு எதிர்கட்சியினர் எதிர்வரும் 28 ஆம் திகதி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாத யாத்திரையொன்றை ஆரம்பிக்கவுள்ளனர்.

இந்த பாதயாத்திரைக்கு முன்னோடியாக வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில், நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பல்வேறு சர்ச்சைகள் நீடிக்கும் நிலையிலும், அரசாங்கம் காணாமல் போனோரின் அலுவலகம் என்ற தலைப்பில் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றில் சமர்ப்பித்திருப்பதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மேற்குலக நாடுகளுடன் இணைந்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைய ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைப்பதாக உறுதியளித்த ஒரு அலுவலகமே இந்த பணியகம் என்றும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய முன்வைக்கப்பட்டுள்ள “காணாமல்போனோர் பணியகத்திற்கான“ சட்டமூலத்தில் இராணுவம் உட்பட அரச படையினரை பழிவாங்குவதற்காக பல விதந்துரைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் பணியகம் ஸ்ரீலங்காவின் சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டுவதற்கான கட்டமைப்புக்குள் அடங்காது. இது நாடாளுமன்றினால் உருவாக்கப்படும் சுயாதீன நிறுவனம் என்பதால், அரச அலுவலகங்களுக்கு பொருந்தும் சாதாரண சட்டங்களுக்கு அப்பால் சென்று கடமையாற்றக்கூடிய அதிகாரம் அதற்கு இருப்பதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.

இதனை வெறுமனே பணியகம் என குறிப்பிட்டாலும் அது ஒரு விசாரணை குழுவாகவே செயற்படும். காணாமல் போனோர் பணியகத்திற்கு அழைத்து சாட்சியாளர்களை விசாரணை செயவதற்கும், வருமாறு உத்தரவிடுவதற்கும் முன் அறிவித்தல் வழங்காது சிறைச்சாலைகள், பொலிஸ் நிலையங்கள் மற்றும் முப்படையினரின் முகாம்களுக்குள் நுழைவதற்கும், ஆவணங்களை பரிசோதிப்பதற்கும், விசாரணைக்காக பொருட்கள் மற்றும் ஆவணங்களை கையகப்படுத்துவதற்கும் அதிகாரம் உள்ளதாக மஹிந்த கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த சட்டமூலத்திற்கு அமைய காணாமல் போனோர் பணியகத்திற்கு நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஏழு பேருக்கும் விசாரணைகளை நடத்துவதற்கான அணுபவம், மனித உரிமைகள் தொடர்பான சட்டங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் தொடர்பிலான அறிவு இருக்க வேண்டும்.

இதற்கு அமைய இதன் உறுப்பினர்களாகும் தகுதியை மேற்குலக நாடுகளின் நிதி உதவியுடன் இயங்கும் அரச சார்பற்ற பிரதிநிதிகளுக்கும், மேற்குலகினால் நடாத்தப்படும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்குமே வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த பணியகம் தகவல் அறியும் சட்டத்திலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த பணியகத்திற்கு வழங்கப்பட்டுள்ள இரகசிய முறைப்பாடுகள் தொடர்பில் விசாரிப்பதற்க உச்ச நீதிமன்றுக்கும் அதிகாரம் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

No comments:

Post a Comment