July 20, 2016

முகாம் வாழ்க்கை தொடரும் நிலையில் கோடி ரூபா செலவில் புத்தர் சிலை!

யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் நிலையில், 12 கோடி ரூபா செலவில் தமிழ்ப் பிரதேசத்தில் புத்தர் சிலை அமைப்பது அவசியம்தானா என வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்னம் கேள்வியெழுப்பியுள்ளார்.


நயினாதீவில் 67 அடி உயரமான புத்தர் சிலையை அமைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், எதிர்ப்புகளை மீறி அங்கு புத்தர் சிலையை அமைக்கும் பணிகள் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருவதாக விந்தன் கனகரட்னம் குறிப்பிட்டுள்ளார்

நயினாதீவில் ஏற்கனவே ஒரு பௌத்த விஹாரை காணப்படும் நிலையில், இவ்வாறானதொரு பிரமாண்ட புத்தர் சிலையை அமைப்பதானது, தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தில் பௌத்தத்தை திட்டமிட்ட வகையில் திணிக்கும் செயலென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இன ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், கடந்த அரசாங்கம் பயணித்த பாதையிலேயே பயணிப்பதாக தெரிவித்த அவர், நல்லாட்சியில் எங்கு பார்த்தாலும் புத்தர் சிலைகள் புதிது புதிதாக முளைப்பதாக தெரிவித்தார்.

வட மாகாணத்தில் திட்டமிட்ட ரீதியில் சிங்கள குடியேற்றங்களை நிறுவும் அரசாங்கத்தினது செயற்பாட்டின் ஒரு பகுதியாகவே இச்செயற்பாட்டை பார்ப்பதாக தெரிவித்த விந்தன் கனரட்னம், அரசாங்கம் இவ்விடயத்தில் தலையிட்டு, நயினாதீவில் புத்தர் சிலை அமைப்பதை தடுத்து நிறுத்தவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment