ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை மற்றும் தராகி சிவராம் படுகொலையுடன் தொடர்புடைய முக்கிய சூத்திரதாரிகள் கைது செய்யப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பினில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் விதந்துரையினை துரித கதியினில் தந்துதவுமாறு தாம் கோரியிருப்பதாக காவல்துறையின் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர தெரிவித்தார்.
நேற்றைய தினம் கொழும்பிலுள்ள இலங்னை காவல்துறை தலைமையகத்தினில் ஊடக செயற்பாட்டு அணியினருடனான சந்திப்பினிலேயே அவர் இத்தகவலை வெளியிட்டார்.
பிபிசி செய்தியாளர் நிமலராஜன் மற்றும் தராகி சிவராம் படுகொலை விசாரணைகள் தொடர்பினில் அங்கு பிரசன்னமாகியிருந்த யாழ்.ஊடக அமையப்பிரதிநிதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இதற்கு பதிலளித்த காவல்துறையின் ஊடகப்பேச்சாளர் றுவான் குணசேகர நிமலராஜன் படுகொலை விசாரணைகள் முடிவுற்று சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனுசரணையிலுள்ளது.
அதுவும் கடந்த 7வருடங்களாக நிலுவையிலுள்ள நிலையினில் விரைந்து பதிலளிக்க கோரியுள்ளோம்.சிவராம் படுகொலையும் விசாரணைகள் மீண்டும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
லசந்த கொலையுடன் தொடர்புடைய முக்கிய சாட்சியொன்று வெலிக்கடை சிறையிலுள்ள நிலையினில் அவரது வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.விசாரணைகளை மேற்கொண்டுவரும் விசேட குற்றப்புலனாய்வு பிரிவு அதனை ஏற்குமிடத்து முக்கிய குற்றவாளிகள் அடுத்து கைது செய்யப்படுவர்.
காணாமல் போன பிரகீத் எக்லியகொட தொடர்பிலான விசாரணையிலும் முக்கிய கட்டம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதே வேளை யாழினில் அண்மையினில் செய்திக்கதையொன்றிற்காக ஊடகவியலாளர் கைது மற்றும் ஊடக அமைய நிர்வாக சபையினர் மீதான கொலை முயற்சி பற்றிய விசாரணைகளது தொடர்நடவடிக்கைகள் தொடர்பிலும் பேசப்பட்டதாக தெரியவருகின்றது.
No comments:
Post a Comment