July 5, 2016

தமிழர் வாழும் பிரதேசங்களை குறிவைக்கும் கும்பல்கள்!

தமிழர் வாழும் பிரதேசங்களை குறிவைத்து, அவற்றை சீரழிப்பதற்கு ஒரு கும்பல் செயற்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.


குறிப்பாக தமிழ் பிரதேசங்களை குறிவைத்து போதைப்பொருளை விநியோகித்து தமிழ் சமூகத்தை சீரழிக்க திறைமறைவில் பல சூழ்ச்சிகள் நடப்பதாக குறிப்பிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர், அவற்றை முறியடிக்க சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

யாழ்.இந்துக்கல்லூரியின் தமிழ்த் தின விழாவில், நேற்று (திங்கட்கிழமை) பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்.மாவட்டம் தற்போது கலாசார சீரழிவை எதிர்நோக்கியுள்ளதென குறிப்பிட்ட கல்வி இராஜாங்க அமைச்சர், பலத்தை பிரயோகித்து இவற்றை தடுக்கவேண்டும் எனவும், குறிப்பாக மாணவர் மத்தியில் இவை தொடர்பில் விழிப்புணர்வூட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், குற்றச்செயல்களுக்கு எதிராக யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் பாராட்டினார்.

தமிழர் அதிகம் செறிந்து வாழும் யாழ்ப்பாணம், நுரெலியா, மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களிலேயே அதிக மதுபாவனை காணப்படுவதாக அண்மையில் ஜனாதிபதியே தெரிவித்திருந்தார். இதனை சுட்டிக்காட்டிய கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன், மக்கள் இதன் விளைவை உணர்ந்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment