July 9, 2016

இராணுவத்தினர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட வழக்கை சுட்டிக்காட்டிய ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்!

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக மனித உரிமைகள் ஆணையாளர், இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் சமர்ப்பித்த வாய்மூல அறிக்கையில் இராணுவத்தினர் குற்றவாளிகளாகக் காணப்பட்ட வழக்கொன்று குறித்து சுட்டிக்காட்டப்பட்டது.


2010ஆம் ஆண்டு கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் இரண்டு தமிழ்ப் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பாக நான்கு இராணுவத்தினர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டமையை மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இவ்வாறான தீர்ப்பு மிகவும் அரிதானது எனவும் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைனின் முழுமையான வாய்மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் இரண்டு தமிழ்ப் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியமை தொடர்பில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட நான்கு இராணுவத்தினருக்கு யாழ். மேல் நீதிமன்றத்தினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் தடுப்புக்காவலில் உள்ளமையை மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொலைகள், கடத்தல்கள், சிறுவர்களை படைக்கு இணைத்தல் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் ஏனைய ஒட்டுக்குழுக்களின் தலைவர்கள் பதவி நிலைகளிலுள்ளதுடன், அவர்கள் மீது குற்றவியல் விசாரணைகள் முன்னெடுக்கப்படாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான விசாரணைகள் கிடப்பில் போடப்படாமல் துரிதப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணையாளரின் முழுமையான வாய்மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான தமது வாய்மூல அறிக்கையை கடந்த 29 ஆம் திகதி, மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் செய்ட் ராட் அல் ஹூசைன் சமர்ப்பித்திருந்தார்.

இதேவேளை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பல முறைப்பாடுகள் உள்ளதாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரிடம் இது தொடர்பில் கேட்டபோது பெருமழையின் பின்னர் ஈரலிப்பு காணப்படும் என அவர் அளித்த பதில் கவலையளிப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரின் இந்த பதில் சட்டத்தின் ஆட்சிக்கு முரணானது எனவும் அந்தக் கட்சி தொடர்பான முறைப்பாடுகள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான விசாரணைகள் நடத்தப்படாத பட்சத்தில் பாதகமான விளைவுகள் ஏற்படும் எனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் இதற்கு முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment