July 9, 2016

இறுதிப்போரின்போது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை-பொன்சேகா!

இறுதிப்போரின்போது இராணுவம் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை என இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.


இறுதிக்கட்டச் சமரின்போது இலங்கை இராணுவம் கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் புகைப்பட ஆதாரத்துடன் சர்வதேச ஊடகமொன்று அண்மையில் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து இந்த விவகாரம் தேசிய ரீதியில் மட்டுமின்றி சர்வதேச மட்டத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்தப்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து இலங்கை அரசு பக்கச்சார்பற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரும் வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை இராணுவத்தை நியாயப்படுத்தும் வகையில் உள்ளக விசாரணையை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார். அதில் கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது சட்டவிரோதமான செயல் அல்ல என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

எனினும், பரணகமவின் இந்தக் கருத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடுமையாகச் சாடியிருந்தார். அத்துடன், கொத்துக்குண்டு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது பாரதூரமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறானதொரு பின்புலகத்தில் கொத்துக்குண்டு விவகாரம் தொடர்பில் இறுதிக்கட்டப்போரை வழி நடத்திய அமைச்சர் சரத் பொன்சேகா கருத்துத் தெரிவிக்கும்போது,

இலங்கை இராணுவம் இறுதி போரின்போது கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. அவற்றை வாங்குவதற்குரிய பணபலமும் இருக்கவில்லை.

எனவே, இது பற்றி எங்கு வேண்டுமானாலும் சாட்சியமளிப்பதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்” என்று குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment