July 9, 2016

மட்டக்களப்பில் சிங்களவர்களால் தமிழர் அடித்துக் கொலை!

கல்குடா பொலிஸ் பிரிவில் தமிழ் குடும்பஸ்த்தர் ஒருவர் சிங்கவர்களால் இன்று அதிகாலை தலையில் பலமாக தாக்கி கொல்லப்பட்டதையடுத்து கல்குடா பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிரதான வீதி கல்குடாவைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை தங்கராசா வயது (51) என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 
வீட்டின் அருகாமையில் இருந்த கடையொன்றில் இரு நபர்களுடன் பொருட்கள் வாங்கி விட்டு வீடு திரும்பும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீதியில் மது போதையில் நின்ற சிங்களவர்கள்சிலர் வீதியால் வந்த மேற்குறித்த நபர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அது பின்னர் கைகலப்பாக மாறி கொலையில் முடிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இது வரை 8 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலரை கைதுசெய்ய பொலிசார் பொது மக்களின் உதவியினை கேட்டுள்ளார்.

இதேவேளை இச்சம்பவத்தினை கண்டித்து பிரதேச மக்கள் வீதி மறியல் போராட்டம் ஒன்றினை இன்று காலை சம்பவம் இடம்பெற்ற இடத்தில் மேற்கொண்டனர். இது தொடர்பாக பக்கச்சார்பற்ற முறையில் நீதியான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக நிலையப் பொறுப்பதிகாரி ஏ.சீ.எச்.கீரகல தெரிவித்தமையினையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாணசபை உப தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் வருகை தந்து பொலிசார் மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தையினை மேற்கொண்டு நிலைமையினை சுமுகமான நிலைக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து கல்குடா பிரதேசத்தில் தனியார் வீடுகளில் இருக்கும் பெரும்பான்மை இனத்தினைச் சேர்ந்தவர்கள் இன்று மாலை 3 மணிக்குள் அவர்களது சொந்த இடம் அல்லது பாசிக்குடா சுற்றுலா விடுதிக்கு திரும்ப வேண்டும். பிரதேசத்திலுள்ள வீடுகளில் தங்கி இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என்றும் இது தொடர்பாக பொலிசார் மற்றும் அப்பகுதி கிராம சேவகர்களின் துணையுடன் வீடு வீடாக சென்று சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பொலிசாருக்கும் சிவில்பாதுகாப்பு குழுக்களுக்கும் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கும் இடையில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தையில் முடிவு எடுக்கப்பட்டது.

சடலம் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை தாம் மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தெடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படடுள்ளதாகவும் தப்பியோடிய சந்தேக நபர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

பாசிக்குடா சுற்றுலா விடுதிகளில் தொழில் புரிவதற்காக சிங்களவர்கள் பலர் கல்குடா மற்றும் அதனை அண்டிய கிராமங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். இதேபோன்றே மேற்குறித்த நபர்களும் வீடொன்றில் தங்கியிருந்னர். இதேவேளை எதிர்வரும் 10 ஆம் திகதி பாசிக்குடா சுற்றுலா விடுதி ஒன்றின் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வருகை தர இன்னும் 2 நாட்கள் இருக்கும் வேளை தமிழர் ஒருவர் சிங்ல்களவர்களால் அடித்துக் கொல்லப்பட்டமை பிரதேசத்தில் அச்சத்தினையும் பதற்ற நிலையினையும் ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments:

Post a Comment