July 8, 2016

யாழ். வலி வடக்கு இராணுவம் வசமிருந்த வீதி விடுவிப்பு!

யாழ்ப்பாணம் – வலி வடக்கு பகுதியில் உள்ள வல்லை – அராலி வீதியில் கட்டுவன் சந்திவரையிலான வீதி நேற்றையதினம் இராணுவத்தினரால் பொதுமக்களின் பாவனைக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.


வலி வடக்கு பகுதியில் 3 ஆம் கட்டமாக 236 ஏக்கர் காணி கடந்த மாதம் விடுவிக்கப்பட்டது. அந்தவகையில் கட்டுவன், குரும்பசிட்டி பகுதியில் 126 ஏக்கரும், வறுத்தளைவிளான் பகுதியில் 12 ஏக்கரும், காங்கேசன்துறை பகுதியில் 125 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.

இதில் வல்லை- அராலி வீதியில் கட்டுவன் சந்திப் பகுதி உள்ளடக்கப்படவில்லை. இதற்கு பதிலாக பொதுமக்களின் தனியார் காணியின் ஊடாக பாதை அமைக்கப்பட்டது. காணிகளின் உரிமையாளர்கள் பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் பொதுமக்களின் பாவனைக்கும் பேருந்து போக்குவரத்து க்கும் கடினமாக இருப்பதனால் குறித்த கட்டுவன் சந்தி வரையான வீதியை விடுவிக்குமாறு அரச அதிகாரிகளால் இராணுவத் தளபதியுடன் பேச்சுக்கள் நடத்தப்பட்டது.

அந்தவகையில் கட்டுவன் சந்தி வரையிலான வீதியை விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்து நேற்றையதினம் குறித்த வீதி உள்ளடங்கிய 25 ஏக்கர் நிலப் பரப்பை விடுவித்துள்ளனர் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment