August 18, 2014

தமிழினப்படுகொலை விசாரணை வலியுறுத்தி வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் நவிபிள்ளைக்கு கடிதம்

இலங்கையில் இனப்படுகொலைகள் இடம்பெற்றுள்ளனவா என்ற அடிப்படையில் போர்குற்ற விசாரணைகளை முன்னெடுக்க வலியுறுத்தி
வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளனர்.
வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையிலான 33 உறுப்பினர்கள் கூட்டாக கையொப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ‘தமிழ் மக்கள் தாம் சிங்கள அரசினால் படுகொலைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று நம்புகின்ற நிலையில், இறுதிப் போரில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். வழிபாட்டுத்தலங்கள் அழிக்கப்பட்டன.
அத்துடன் தற்போது கடத்தல், காணாமல் போகச்செய்தல், அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. அதேவேளை, தமிழர் பிரதேசத்தில் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் அவற்றுடன் வடகிழக்கு மாகாணங்களில் மக்கள் இன்னும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற முடியாமல் அகதிகளாக இருக்கின்றார்கள். இந்த விடயங்கள் அனைத்தையும் விசாரணைக்குழு கருத்திற் கொண்டு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்.
1974 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்து ஆராயப்பட வேண்டும். 1970, 1980, 1990 மற்றும் 2000 ஆண்டுகளில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த உண்மைகளையும் வெளியிடவில்லை. அத்துடன், உள்ளுர் பொறிமுறைகளை நல்லிணக்க ஆணைக்குழுவும் ஆராயவில்லை.
சர்வதேச விசாரணைக்குழு இலங்கை வருவதற்கு அரசு அனுமதியளிக்க மறுத்தால் தமிழ் நாட்டில் விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த மாதம் பதவியில் இருந்து விலகும் நீங்கள் உலகில் மனித உரிமையை நிலைநாட்டுவதற்காக மிகவும் திறமையாக செயற்பட்டுள்ளீர்கள். அந்த சேவைக்கும் பணிக்கும் எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்து வடகிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் 33 பேர் கையொப்பமிட்டு நவநீதம்பிள்ளைக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்

No comments:

Post a Comment