August 18, 2014

இலங்கைத் தூதரகத்தை முற்றுகை இட்ட நாம் தமிழர் கட்சி!

நாம் தமிழர் கட்சியினர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகராலயம் முன் இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கையின் இராணுவ இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பற்றி அவதூறு பரப்பியதை கண்டித்தும், இலங்கையில் நடைபெறும் இராணுவ மாநாட்டில் இந்தியாவில் இருந்து யாரும் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
போராட்டத்தில் சீமான் பேசியதாவது,
இலங்கை அரசாங்கம் தனது இராணுவ இணையத்தளத்தில் தமிழக முதலமைச்சரை பற்றி கொச்சைப்படுத்தி கருத்து வெளியிட்டிருப்பது கடுமையான கண்டனத்துக்குரியது.
இந்நிலையில் இலங்கையில் இன்று முதல் 19–ம் திகதி வரை இராணுவ மாநாடு நடக்கிறது. இதில் மத்திய அரசின் சார்பில் யாரும் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.
ஐ.நா. விசாரணைகுழுவை ஏற்காத இந்தியா, இலங்கை அமைத்த விசாரணை குழுவை ஏற்றுக் கொள்கிறது. தொடர்ந்து தமிழர்களை இந்தியா வஞ்சித்துக்கொண்டே இருக்கிறது.
இராணுவ கருத்தரங்கில் இந்தியாவில் இருந்து யாரும் பங்கேற்க போகிறார்களா? இல்லையா என்பது பற்றி பா.ஜனதா அரசு இன்னும் எந்தவித முடிவையும் அறிவிக்கவில்லை.
மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசு இலங்கை ஜனாதிபதியை சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. பா.ஜ.க. காங்கிரஸ் அரசுகள் தமிழ் இன விரோத போக்குடனேயே நடந்து வருகின்றன.
இலங்கை இனப்படுகொலையை கண்டிக்காத இந்தியா இலங்கை மாநாட்டில் பங்கேற்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு சீமான் பேசினார்.

No comments:

Post a Comment