August 18, 2014

சென்னையில் ராஜபக்சேவின் ஸ்டார் ஓட்டல்! மகிந்தவின் பினாமிகளின் இடமாக தமிழக மாறுகிறதா?

"இலங்கை இனப்படுகொலை போர்க் குற்றவாளிகள் மீது பன்னாட்டு விசாரணை நடத்தவேண்டும் என தமிழகமே ஐந்து ஆண்டுகளாக தீவிரமாகப் போராடி வருகிறது.
இதே தமிழகத்தின் தலைநகரில், அந்த இனப்படுகொலையின் முக்கிய குற்றவாளி ராஜபக்சே, சொகுசு ஓட்டல் தொழிலை நடத்தப்போகிறார்' என்கின்றன அதிர்ச்சித் தகவல்கள்.


"எயிட்கென் ஸ்பென்ஸ்'’- இது நட்சத்திர அந்தஸ்து கொண்ட பிரபல பிராண்ட் சொகுசு ஓட்டல். பிரிட்டன் தொழிலதிபர் ஒருவரால் தொடங்கப்பட்டு, இலங்கை, இந்தியா, மாலத்தீவு, ஓமன் ஆகிய நாடுகளில், புகழ்பெற்று இருக்கும் ஓட்டல் இது. பின்னர், இந்த ஓட்டலை ஹாரி ஜெயவர்த்தனே என்பவருக்கு அந்த பிரிட்டன் தொழிலதிபர் விற்றுவிட்டார். அதாவது, ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ ஓட்டலின் உரிமையாளர் கம் சேர்மன், ஹாரி ஜெயவர்த்தனே.

யார் இந்த ஹாரி ஜெயவர்த்தனே?

இலங்கையின் முக்கியமான வர்த்தக முதலாளி! சாதாரண வர்த்தகம் அல்ல, இலங்கையின் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகத்தில் முன்னிலையில் இருக்கும் புள்ளி. லங்கா மில்க் ஃபுட்ஸ், லங்கா டிஸ்டில்லரீஸ் (மதுபான) நிறுவனம் ஆகியவற்றின் உரிமையாளர், இவர்தான். இலங்கையின் மிகப் பெரிய வங்கியான ஹாட்டன் நேசனல் வங்கியின் இயக்குநர், சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரேசனின் தலைவர் என அந்நாட்டின் மிக முக்கிய பிரமுகர்களில் ஒருவராகவும் வலம் வருகிறார், ஹாரி. இதைவிட முக்கியம், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு நெருங்கிய நண்பர், வர்த்தகக் கூட்டாளி எல்லாமே.

இலங்கையில் இருந்து சென்னைக்கு நகர்வோம்.

ராயலா டெக்னோபார்க் கார்ப்பரேசன்’என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ரஞ்சித் பிரதாப், சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் பெருங்குடி அருகில், 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றைக் கட்டி முடித்திருக்கிறார். பிரபலங்களுக்காக ஓட்டல்களைக் கட்டி அவர்களுக்கு விற்பதுதான் இவரின் தொழில் என்றும் தொழில்துறை வட் டாரங்களில் இவரைப் பற்றிச் சொல்கிறார்கள். இந்த ஓட்டல் ஹாரி ஜெயவர்த்தனேவுக்கு 125 கோடிக்கு கைமாறியுள்ளது. இதற்கான ஒப்பந்தமும் முடிந்துவிட்டது. ஓரிரு வாரங்களில் இந்த ஓட்டல், ‘எயிட்கென் ஸ்பென்ஸ்’ என பெயர் சூட்டப்பட்டு, திறப்பு விழா நடக்கவுள்ளது.

எட்டு மாடிகளும் 150 அறைகளும் கொண்ட இந்த சொகுசு ஓட்டலை, ஹாரி மூலம் வாங்கியிருப்பது சாட்சாத் ராஜபக்சே. ராஜபக்சே -ஹாரி இடையே 60:40 பங்குக் கணக்கில் இந்த ஓட்டல் நடத்தப்பட இருக்கிறது என்கிறார்கள். கொழும்புவில் ஈழத்தமிழர்கள் நடத்திய ஓட்டல் மற்றும் பிற தொழில் நிறுவனங்களைக் கையகப்படுத்தி பறித்துக்கொண்டது ராஜபக்சே அரசு. அதே ராஜபக்சேவால் தமிழகத்தில் நட்சத்திர ஓட்டல் தொழில் நடத்த முடிகிறது.

இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்கவேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் போடும் ஜெயலலிதாவின் ஆட்சியில்தான், இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே ஓட்டல் தொழில் நடத்தவும் துணிந்திருக்கிறார் என்றால், பெரிய தைரியம்தான்.

யார் கொடுத்த தைரியம் என்பதுதான் எல்லா தரப்பினரின் கேள்வியாக நிற்கிறது!

நன்றி
நக்கீரன்

No comments:

Post a Comment