June 6, 2016

ஆபத்தில் உலகம் – எச்சரிக்கை தகவல்!

சுமார் 1 லட்சம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டில்
ஆர்டிக் கடலின் மையப்பகுதி மற்றும் வடதுருவத்தில் பெருமளவில் பனிக்கட்டிகளே இல்லாத நிலை ஏற்பட உள்ளது.

இது உலகுக்கு ஆபத்து அதிகரிப்பதன் வெளிப்பாடு’ என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பனியால் சூழப்பட்டிருக்கும் ஆர்டிக் கடல் தொடர்பான ஒரு புள்ளி விவரத்தை அமெரிக்க தேசிய வெண்பனி மற்றும் பனிக்கட்டிகள் தகவல் மையம் தற்போது வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜூன் 1ம் தேதி 11.1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவுக்கு ஆர்டிக் கடலில் பனிக்கட்டிகள் படர்ந்துள்ளது.

இது, கடந்த 30 ஆண்டுகளில் சராசரி அளவான 12.7 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவை காட்டிலும், 1.5 மில்லியன் சதுர கி.மீ. பரப்பளவு குறைவாகும். இந்த அளவானது, இங்கிலாந்தின் பரப்பளவை போல 6 மடங்கு அதிகம்.

இதுகுறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் வாதம்ஸ் கூறியதாவது:

எனது கணக்குப்படி, விரைவிலேயே ஆர்டிக் கடல் பகுதியின் மையப்பகுதி மற்றும் வடதுருவத்தில் பெருமளவில் பனிக்கட்டிகளே இல்லாத நிலை உருவாகும். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் மேலும் 1 மில்லியன் சதுர கிமீ பரப்பளவு பனிக்கட்டிகள் உருகலாம். எனவே, இந்த ஆண்டிலோ அல்லது அடுத்த ஆண்டிலோ, ஆர்டிக் கடலின் இரு பகுதிகளில் பனிக்கட்டியே இல்லாத நிலை உருவாகும் அபாயம் உள்ளது.



இதற்கு முன், 1 லட்சம் அல்லது 1.2 லட்சம் ஆண்டுக்கு முன் இதுபோன்ற நிலை ஏற்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

உலக வெப்பமயமாதல் காரணமாக ஆர்டிக் கடலில் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. துருவப் பகுதிகளில் பனிப் பாறைகள் படிப்படியாக மறைந்துவரும் நிலையில், மற்றொருபுறம் கடல் மட்டமும் உயர்ந்து வருவதால் உலகில் எல்லா உயிர்களுக்கும் ஆபத்தை அதிகரித்து வருவதற்கு விடுக்கப்படும் எச்சரிக்கையே இது என்கின்றனர் விஞ்ஞானிகள்.

No comments:

Post a Comment