June 18, 2016

எழுவர் விடுதலையை வலியுறுத்தி வாகனப் பேரணி எழுப்பிய வினாவும், விடையும்!

இரண்டு தினங்களுக்கு  முன் எழுவர் விடுதலையை வலியுறுத்தி இந்த வாகனப் பேரணி தேவையா? என்று கேட்டு அது ஏன் கூடாது என்பதையும்
விளக்கமாக எழுதியிருந்தாலும் பல உணர்வாளர்கள் ஏன் இப்படி எழுதினேன் என்று கேட்டவண்ணம் இருந்திருக்கிறார்கள். அது ஏன் என்பதை விளக்க வேண்டிய கடமை எனக்கிருப்பதை உணர்கிறேன்.
மத்திய அரசு, அழுத்தத்திற்கு பணிவதில்லை!                                                                                  
சற்றேறக்குறைய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் பெருந்தீயாக பரவிய நேரத்தில் அதன் வீரியம் தனித் தமிழ்நாடு என்ற சிந்தனையை வளர்ப்பதைக் கண்டு அஞ்சிய மத்திய அரசு அவசரமாக ஒரு சட்டத்தை கொண்டுவந்தது. அதுதான் இந்தியாவில் உள்ள Unlawful Activities Prevention Act,1967 சட்டம். இன்றைய தமிழகத்தின் நியாயமான உணர்வுகளை இச்சட்டம் ஒரு வகையில் அடக்கி வைத்துள்ளது. இச்சட்டத்திற்கு அஞ்சியவர்கள் தந்தை பெரியாரின் ஒப்பீட்டில் கண்ணீர்த் துளிகளாயினர்.இது போன்ற சட்டங்களை இருப்பில் வைத்துக்கொண்டு எந்த வீரனும் ஆர்ப்பரிக்க முடியும். ஆனால் இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு அரசியல் கட்சிகளாக செயல்பட முடியாது. ஒன்றை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். தமிழக அளவில் தமிழக அரசினை வழிக்கு கொண்டுவர தமிழக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும், ஊர்வலங்களும் உதவும். ஆனால் ஒரு மாநில அளவிலான பிரச்னைக்கு இந்திய மத்திய அரசு எவ்வித அழுத்தத்திற்கும் பணிவதில்லை. மாறாக அது மாநில அரசின் இருப்பையே சங்கடத்திற்கு உள்ளாக்கும்.
பா.ஜ.க -காங்கிரஸ் வேறுபட்டவையல்ல !  
இந்த நிலையில் ராஜீவின் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்களின் விடுதலை தமிழக, அயலக தமிழர்களுக்கு விருப்பமானஅவசியமாக இருக்கலாம். ஆனால் இன்றும் இந்திய அளவில் பெரும்பாலானோருக்கு அது உகந்ததாயில்லை. முந்தைய காங்கிரஸ் அரசு தனது விதி முடியும் நிலையை எதிர் நோக்கி பதவி விலகும் காலத்தில் மிக முக்கிய செயல் ஒன்றை செய்து சென்றது. அதற்கு தமிழகத்திலேயே பெரும் எதிர்ப்பில்லை; விவாதங்களுமில்லை.இந்தியாவில் சட்டபுறம்பான செயல்களை தடுக்கும் சட்டத்தின் கீழ் புலிகள் செயல்படுவதை தடுக்க  ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை புதிப்பித்து நீட்டிக்கும் வழக்கத்தை அந்த முறை ஐந்தாண்டுகளுக்கு அது நீட்டித்து சென்றது. ஏனெனில் பா.ஜ.க ஆட்சியில் ஒருவேளை புலிகளின் மீதான தடை நீக்கப்படலாம் என்ற அச்சம். ஆனால் பா.ஜ.கதனது முந்தைய காங்கரஸ் ஆட்சியை விட எந்தவிதத்திலும் குறைவில்லாத நிலையை கொண்டுள்ளது. எனவே இந்த கோரிக்கையை வலியுறுத்தி வாகன ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டால் அது அனைத்திந்திய அளவில் ஒரு பாரிய கவனத்தை ஈர்க்க ஏதுவாகும் அது இவர்களின் விடுதலைக்கு முட்டுக்கட்டையாகலாம் என்பதுதான் என் கவலையாயிருந்தது.
 தமிழீழ வரலாற்றில் பதியப்படும்!

உங்களின் உணர்வுப்பூர்வமான கருத்துக்கு நான் ஒத்துப் போகவேண்டும் என்று நீங்கள் உணர்வாளர்களாக எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால் நான் முடிவில் கவனமாயுள்ளேன். புரிந்து கொள்ளுங்கள். பல வழக்கறிஞர்களின் கருத்துகள் வேறு விதமாக இருக்கலாம். அவைப் பற்றி நான் கருத்து சொல்ல எதுவுமில்லை.  நான் நடைமுறை சாத்தியத்தைப் பற்றி பேசுகிறேன். எனது போக்கும் செயலும் வித்தியாசமானவை. உச்சநிலை தலைவரொருவர் தனது சகாக்களுடன் பயணித்த கப்பல் நடுக்கடலில் இந்திய கப்பற்படையினரிடம் சிக்கி இந்தியகடல்எல்லைக்கு இழுத்து வரப்பட்டுக்கொண்டிருந்தபோதுநானும் உரையாடி இருக்கிறேன். அறிவுப்பூர்வமாக இல்லாமல் உணர்வுபூர்வமாக இருந்திருந்தால் அன்று அவரிடம்  கப்பலை தீயிட்டுக்கொண்டு  மாவீரராக ஆவதே சரியென கருத்து சொல்லியிருக்க மாட்டேன். இன்றைக்கும் அது என்னை வாட்டி வதைத்தாலும் நான் அன்று அவருக்கு சொல்லியதுதான் சரி என்று இன்றும் உணர்கிறேன்.மாவீரர்கள் என்றும் மரணிப்பதில்லை. ஆகவேஎனது சிந்தனை நடைமுறை கொள்கைப்படியானது. ஒருநாள்இந்த உண்மையெல்லாம் தமிழீழ வரலாற்றில் பதியப்படும். விரைவில் நீங்களும் அறிவீர்கள்.
மாற்றாரை மனதில் வையுங்கள்!
இப்போதுள்ள பிரச்சனையே தமிழக அரசு இந்திய அரசியல் சட்டப்பிரிவு 161ன் கீழ் விடுதலை செய்ய முடியும் என்றும் அதை வலியுறுத்தி தமிழக அரசுக்கு ஆதரவாக இந்த பேரணி நடத்தப்படுவதாகவும் சொல்லப்பட்டது. அது இயலுமா என்று இப்போது தெளிவாக கூறமுடியாது. ஏனெனில் தொடர்ந்து நடந்த உச்சநீதிமன்ற வழக்குகளின் நடைமுறைகள் கருதி  இனி தமிழக அரசு மட்டுமே நேரிடையாக இவ்விடுதலையை செய்ய இயலுமா என்ற கேள்விக்குறி பெரிதாக எழுந்துள்ளது. உங்களை விட மாற்றார் அந்த விளக்கத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்ற அச்சத்தால் இதனை நான் இப்போது தெளிவாக விளக்கமுடியாது. எனவே நான் ஒரு வழக்கறிஞர் என்ற முறையில் கூறும் கருத்தாக மட்டும் இப்போது எடுத்துக்கொள்ளுங்கள். இந்தக் காரணத்தால்தான் வாகன பேரணியைப் பற்றி கருத்து கூறினேனே தவிர வேறில்லை.
பொய் உண்மையாகமுடியாது!
என்னைபலருக்கு யாரென்றே தெரியாது. விடுதலையை எதிர்நோக்கும் சகோதரர்களுடன் மேலும் 11 பேர்கள் சேர்ந்து மொத்தம் 18 பேர்களின் வழக்கறிஞராக இவ்வழக்கில்இருந்தவன் நான். இவர்களில் ஈழத் தமிழர்கள் அனைவருமே இருந்தனர். விரும்பத்தகாத நிலையில் நான் தொடர்ந்து இவ்வழக்கில் பணியாற்ற இயலாது போனது. அவைகளைப் பற்றி யாருக்கும் இப்போது தெரிய வாய்ப்பில்லை.ஆனால்தெரிந்தாகவேண்டும்.பொய்உண்மைவேஷம் போட்டு ஆடுவது இவ்வழக்கின் வரலாற்றை ஒரு சார்பாக்கிவிடும். ஆனால் நான் பணியாற்றிய வரை தடா சட்டம் புதிதாக அமலில் இருந்த காலத்தில் எல்லோரும் வதைப்பட்டனர். இவர்களின் கண்களில் ஒரு தூசி கூட விழாமல் இமையாக பலவாறும் நீதிமன்றங்களில் போராடி காத்தவன் நான் என்பதை இன்றும் உள்ளிருப்பவர்களால் மறுக்கமுடியாது. எனவே அவர்களின் விடுதலைக்கெதிராக நான் செயல்படுவேன் என்று கனவிலும் யாரும் கருத வேண்டாம். இன்று அவர்கள் படும் பாட்டை காணச்சகிக்க இயலவில்லைதான். ஆனால் இந்த நிலைக்கு ஆரம்பக்கால வழக்கின் நடைமுறைகள் சரியானதில்லை. எவ்வளவோ முயன்றும் அவர்களுக்கு சரியாக அம்முயற்சியின் செய்திகள் சென்று சேரவில்லை. இவை பற்றி நான் பின்னர் விவரமாக தொடராக தெரியத் தருவேன்.
தமிழக முதல்வரால் மட்டுமே சாத்தியம்!
எனவே நம்மவர் விடுதலைப் பொருட்டு நான் முழுமையாக நம்பியிருப்பது தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்களை மட்டுமே. அவரால் மட்டுமே இது சாத்தியமாகும். நீதிமன்றங்களால் முடியாது. அரசியல் தெளிவும், திண்மையும், மன உறுதியும், எடுப்பதை முடிக்கும் உறுதியும் கொண்ட தமிழக முதல்வரால் மட்டுமே இந்திய மத்திய அரசினை ஒப்புக் கொள்ள வைக்க இயலும் என்பதை மனதிலேற்றி நீங்கள் அனைவருமே அவரை வேண்டி கேட்டுக் கொள்ளுங்கள் என்று முன்பே எழுதினேன் என்பதை அறிவீர்கள். தமிழக அரசை சங்கடத்தில் ஆளாக்கும் வண்ணம் எந்தவொரு ஆர்ப்பாட்டங்களையும் செய்ய வேண்டாம்.

இதனைக் கருதியே திரு.பேரறிவாளன் அவர்களும் பேரணியில் கட்சிக்கொடிகளும், வேறு கோஷங்களும் வேண்டாம் எனவும் கட்சிகளின் நிழல்படாமல் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்திருந்தார். எனது கருத்து சரிதான். தமிழக சிறைகளில் முன்னர் இருந்த வாழ்நாள் சிறைவாசிகளின் விடுதலை முறைகளுக்கும் இவர்களுக்கும் விடுதலையாவதில் பெரிய வேறுபாடுண்டு. அதனை நன்றாக புரிந்துகொள்ளுங்கள். நீதிமன்ற வாசல்கள் திறந்த நிலையில் இல்லை. விடிவை நோக்கி நெடுந்தூரம் பயணிக்க வேண்டியுள்ளதை உணருங்கள். .சாதிகள், மதங்கள், இன வேறுப்பாடுகள் இருப்பினும் தமிழர்கள் எல்லோருக்குமே அப்பொறுப்பு உள்ளது என்பதிலும்,அவர்கள் துணை நிற்ப்பார்கள் என்பதிலும் யாரும் ஐயம் கொள்ளத் தேவையில்லை. இவ்விஷயத்தில் அரசியல் சார்ந்தோர் தங்கள் கட்சிகளின் பேர் முன்னிற்பதை தவிர்த்து ஒருங்கிணைய வேண்டும்.  அரசியல்  பாரிய அளவில் இறுதி நடவடிக்கைகளில் எடுக்கும் முயற்சிகளில் எது சாத்தியமோ அதனை விடாது தொடர்ந்து பற்றுவோம்.
 நன்றி                                                                                                                   -.
வழக்கறிஞர் கலைமணிசென்னை.

No comments:

Post a Comment