June 18, 2016

நிலத்திற்காக உயிரை துறப்போம்! வலி மக்கள்!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் சாதகாமான பதிலினை அளிக்காத பட்சத்தில் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் தீர்மானித்து உள்ளனர்.

தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பில் , முகாம் தலைவர்கள் மற்றும் மக்களுடனான சந்திப்பு வெள்ளிக்கிழமை மாலை யாழ்.பாடி விடுதியில் நடைபெற்றது.
அந்த சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பினை முகாம் தலைவர்கள் ஒன்றிணைந்து நடாத்தி இருந்தனர். அதன் போதே தொடர் உண்ணாவிரத போராட்டம் தொடர்பிலான அறிவித்தலை விடுத்தனர்.
மேலும் தெரிவிக்கையில் ,
வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை ஆறு மாத காலப்பகுதிக்குள் மீள் குடியேற்றுவேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா வழங்கிய வாக்குறுதியின் கால எல்லை எதிர்வரும் 20ம் திகதியுடன் முடிவடைகின்றது.
துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைக்க யாழ்ப்பணத்திற்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி மீள் குடியேற்றம் தொடர்பில் காத்திரமான பதிலை அளிப்பார் என நம்புகின்றோம்.
அவ்வாறு இல்லை எனில் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் குதிப்போம்.
இந்த நல்லாட்சி அரசாங்கம் எங்களை ஏமாற்றிவிட்டதா என சந்தேகிக்கின்றோம். ஆறு மாத காலப்பகுதிக்குள் மீள் குடியேற்றுவோம் என ஜனாதிபதி வாக்குறுதி தந்தார். இது வரை மீள் குடியேற்றம் செய்யப்படவில்லை.
தற்போது இராணுவத்தினர் கூறுகின்றார்கள் ஆயுத கிடங்கு இருக்கின்றது என ஆனால் இராணுவத்தினர் எமது காணிகளில் ஹோட்டல்கள் , விளையாட்டு மைதானம் , கால் நடை பண்ணைகள் மற்றும் விவசாய பண்ணைகளை அமைத்து எங்கள் காணிகளை ஆக்கிரமித்து உள்ளனர்.
தற்போது உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள எமது வீடுகளையும் இடித்தழிக்கின்றார்கள். அத்துடன் எங்கள் காணிகளில் இருந்து கற்களையும் அகழ்ந்து செல்கின்றார்கள்.
நாங்கள் தொடர்ந்து முகாம்களில் கஷ்டங்களை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். எங்கள் பிள்ளைகள் முகாமில் இருந்து பல கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வியை தொடர்ந்து கல்வியில் நல்ல தேர்ச்சிகளை பெற்றாலும் “முகாம் பிள்ளைகள் ” எனும் பட்டம் அவர்களுக்கு சூட்டப்படுகின்றது. எங்கள் பிள்ளைகளுக்கு அந்த பட்டம் வேண்டாம்.
தற்போது வேறு காணிகளை வழங்கு கின்றோம் அந்த காணிகளில் வீடமைத்து தருகின்றோம் என கூறுகின்றார்கள். எங்களுக்கு என சொந்தமாக காணிகள் வீடு இருக்கும் போது அவற்றை விட்டு விட்டு நாம் எதற்காக அவர்கள் தரும் காணிகளில் வீடுகளில் குடியேற வேண்டும்.
எங்களை எங்கள் சொந்த காணிகளில் மீள்குடியேற்றம் செய்யுங்கள் என கோரி அச்சுறுத்தல்கள் , தடைகளை தாண்டி பல போராட்டங்களை முன்னெடுத்தோம். நல்லாட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனா அவர்கள் எமக்கு வழங்கிய வாக்குறுதியை நம்பி எமது போராட்டங்களை கைவிட்டு மீள் குடியேற்ற கனவுகளுடன் காத்திருந்தோம். இன்று அவை பொய்த்து போய்விடுமோ என அஞ்சுகின்றோம்.
இனியும் எவரையும் நம்ப நாங்கள் தயாராக இல்லை எங்களுடைய நிலத்திற்கு செல்ல வேண்டும். இல்லை எனில் எங்கள் உயிரை விட வேண்டும் என முடிவுக்கு வந்து உள்ளோம்.
வலி.வடக்கில் தையிட்டியில் இருந்து இடம்பெயர்ந்து வசித்து வரும் வன்னியசிங்கம் பிரபா என்பவர் எதிர்வரும் 22ம் திகதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் குதிக்க போவதாக கூறியுள்ளார்.
மீள் குடியேற்றம் சாத்தியப்படும் வரை அவருடைய உண்ணாவிரதத்திற்கு வலு சேர்க்க நாம் தயாராக உள்ளோம். அதேபோன்று வலி.வடக்கில் இருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் , வாடகை வீடுகளில் , நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் மக்கள் , பொது அமைப்புக்கள் , பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய மீள் குடியேற்றத்திற்காக ஒன்றிணைந்து போராட வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்.
அதேவேளை தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கமானது, ஏனைய மாவட்டங்களிலும் இராணுவத்தினரின் காணி ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட மக்களை ஒன்றிணைப்பதாக உறுதி அளித்துள்ளது.
அதன் பிரகாரம் அனைத்து மக்களையும் ஒன்றிணைந்து பாரிய போராட்டத்தினை முன்னெடுக்க தீர்மானித்து உள்ளோம் என தெரிவித்தனர்.

No comments:

Post a Comment