June 18, 2016

கிளிநொச்சி முட்கொம்பனில் இராணுவ அனுசரனையில் காடழிப்பு!

கிளிநொச்சி, முட்கொம்பன் பகுதியில் இராணுவ அனுசரனையுடன் பெறுமதி வாய்ந்த மரங்கள் வெட்டப்பட்டு கொண்டு செல்லப்படுவதாகவும் இந்த சட்டவிரோத காடழிப்பை உடனடியாக தடுத்து நிறுத்துமாறும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தினமும் தங்கள் பிரதேசத்தின் மரங்கள் வெட்டப்பட்டு தமது பகுதி வேகமான காடழிப்பு இடம்பெறுவதாகவும் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் இக் காடழிப்பு அதிகாரிகளின் அனுசரனையுடனேயே இடம்பெறுவதாகவும் கூறுகின்றனர். கையூட்டுக்களுக்காக காடுகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே காடழிப்புக்கு வழிகாட்டுவதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.
பகல் வேளையிலேயே மிகவும் சுதந்திரமாக இந்தக் காடழிப்பு இடம்பெறுவதாக குறிப்பிடும் மக்கள், பாரிய மரவெட்டு இயந்திரங்கள் மூலம் பாலை, முதிரை போன்ற பெறுமதி வாய்ந்த மரங்கள் அறுக்கப்பட்டு பாரிய வாகனங்களில் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதனால் தமது பகுதியின் காட்டு வளம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் தமது வாழ்வும் தொழிலும் சூழலும் பாதிக்கப்படும் என்று அஞ்சும் பிரதேச மக்கள் இதனை உரிய அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர். இதனை தடுக்க வேண்டிய ஸ்ரீலங்கா பொலிஸார் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் இராணுவத்தினரும் காடழிப்புக்கு பாதுகாப்பு அழித்து அனுசரனை வழங்கி வருகின்றனர் என்பதும் இங் கே சுட்டிக்காட்டத்தக்கது.

No comments:

Post a Comment