May 30, 2016

முள்ளிவாய்க்கால்....!

பலரறியா ஊர்.
பார் அறியாப் பேர்
பார்த்திருக்க கறுத்தது
போர்க்கருவிப் புகையால்….

தணலாய் சிவத்தது
நெருப்பாய் புகைத்தது
புதைகுழியாயும் நிறைந்தது
மொகஞ்சோ, ஹரப்பாவாய்…
ஒரு துண்டு நிலத்தில்
கொன்று குவிக்கப்பட்ட
எம்மினத்தை
புதைகுழியாய் தாங்கிய
நெய்தல் நிலமே
என்னசெய்தாய்
எம் உறவுகளை…?
கரும்புகைக் கூட்டத்தால்
கறுத்துப்போன வானமே!
செங்குருதி ஓட்டத்தால்
சிவந்துபோன தாய்நிலமே!
மண்ணுறுதி கொண்டு
இறுதிவரை நின்று
கரைந்த நம் மறவர்களை
என்ன செய்தாய் சொல்லு?
ஊரூராய் அலைந்து
உறவுகளை இழந்து
ஊனம் கூடக் கரைந்து
நாதியற்றுக் கிடந்த
நம் இனத்தை
தானமாய் எல்லோ
தந்தோம் உன்னிடம்!
தின்று தின்று
ஏப்பமிட்டாயே…..!!!!
பாவியனே!
பொஸ்பரஸ் குண்டுகளால்
பொடியாய்ப் போன
பச்சிளம் சிட்டுக்கள்
என்ன கேட்டார் உன்னை?
கருகிய உடல்களும் - தரை
விரவிய சடலங்களும்
கடந்தெல்லோ வந்தோம்
முள்வேலி தேடி…
பச்சைச் சட்டைகளின்
எச்சில் பசிக்கும்
இலையான்களின்
இனிதான இரைக்கும்
தமிழனின் உடல்தான்
கிடைத்ததா உனக்கு!
இரத்தத்தை உறுஞ்சி
பிணத்தை விழுங்கி
ஏப்பமிட்டன
குரூரப் பேய்கள்.
எறிகணை ஏவி
குதறினாய் உயிர்களை
இஞ்சி நிலம் பிடிக்க
அஞ்சிஞ்சி அடித்தாய்
கிபிரால் கொட்டினாய்
சன்னங்களால்
சல்லடையிட்டாய்
வாழ்வளித்த பூமியை
வாழ்விழந்த நிலமாய்
வரமொன்று ஈந்தாய்
ஓலச் சத்தங்களுள்
ஓநாயாய் உலாவந்தாய்
இரசாயனம் கொண்டு
இறுதியில் எமையழித்தாய்
ஈனப் பிறவியே
இரக்கமற்ற சாதியே
கோரப்பற்களில்
கொப்பழிக்கும் குருதியுடன்
இருக்கிறாய் இன்னமும்
இனவாதச் சாயம் பூசி
இறந்த தாயின் முலையில்
இரத்தத்தை உறுஞ்சியே
தசைக்கட்டியாய்
தரிசனமான
பச்சிளம் பிஞ்சுகள்
எத்தனை எத்தனை?
பருப்பும் சோறும்
பச்சைத் த ண்ணியும்
இருப்பாய்ப் போன வாழ்வை
சலிப்பின்றித் தாங்கி
உருவமே இன்றி
உருக்குலைந்த
உறவுகள் எத்தனை?
பாடைகள் கூட இன்றி
புழுதி மண்ணைப் புரட்டி
புதைக்கக்கூட வழியின்றி
அங்கங்கே சிதறவிட்டு
அடியெடுத்த பாதச்சுவடுகள்
இன்றங்கே அலைகிறது
உம் நினைவுகளுடன்..
கண்ணீர்க் கோடுகள்
காயவில்லை இன்னமும்
சன்னங்கள் பட்ட வடுக்கள்
ஆறவில்லை கொஞ்சமும்
இன்றோடு ஏழாண்டு
கடந்திற்று – உன்
அநியாயம் நடந்து.
இன்னும்தான் எமக்கில்லை
இனிதான விடிவு.
கோடரிக் காம்புகளின்
நாக்குகளுக்கு இரையான
இரத்த உறவுகளே!
ஆண்டுகள் அகலட்டும்
அடங்காத் தாகமும் தீரட்டும்
ஆனாலும் அணையாது
முள்ளிவாய்க்கால் ஈகங்கள்…
-மல்லாவிக் கஜன்

No comments:

Post a Comment