May 19, 2015

கிளிநொச்சியில் வித்தியாவின் படுகொலையை கண்டித்து சந்தை வர்த்தகர்கள் போராட்டம்(படங்கள் இணைப்பு)

வித்தியாவின் படுகொலையை கண்டிக்கும் வகையில்  அதற்கு நீதி கோரியும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்தக்கோரியும் இன்று கிளிநொச்சி சந்தை வர்த்தகர்களின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் சந்தை வர்த்தகர்கள், பொதுமக்கள், பேரூந்து சங்கத்தை சேர்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் ஜனாதிபதி, வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.சிறீதரன், மாவை.சேனாதிராசா, எம்.ஏ.சுமந்திரன் ,சுரேஸ் பிரேமசந்திரன் ஆகியோருக்கு மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி மகஜரில் குறிபிடப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு,
கடந்த 13 ஆம் திகதி புதன்கிழமை பாடசாலைக்கு செல்லும் வழியில் கடத்தப்பட்டு கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மாணவி சி.வித்தியா சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எமது தமிழ் மக்கள் உள்நாட்டுப்போரினால் கொல்லப்பட்ட பின்பு தற்பொழுது ஒரு சுமூகமான சூழலில் வாழ்ந்து வருகின்றனர்.இவ்வாறான வேளையில் பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளமை வேதனை அளிக்கின்றது.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் இதுபோன்ற பாலியல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.இதனால் பாடசாலை மாணவிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்க வேண்டும் என்றும் குறித்த சம்பவத்தின் குற்றவாளிகள் சார்பாக சட்டத்தரணிகள் யாரும் முன்னிலையாக கூடாது என்றும் வலியுறுத்தியும் காலதாமதமின்றி உடனடியாக குற்றவாளிகளுக்கு மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கிளிநொச்சி வர்த்தக சமூகம் சார்பாக கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment