May 20, 2016

ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஈழம்! - இந்தியாவைச் சூழும் ஆபத்து!

தாயிடம் பால் கொண்ட பிள்ளையை ஒரு தடயம் இன்றி எரித்தாராம்’ என்ற வைரமுத்துவின் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.


ஈழத்தின் இறுதிக்கட்ட போர் முடிந்து ஏழு ஆண்டுகள் ஆகின்றன.முள்ளி வாய்க்கால் கிராமத்தில் மே 17 மற்றும் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாக இலங்கை அரசு உறுதி செய்து போர் முடிவுற்றதாகப் பிரகடனப்படுத்தியது.

இறுதிப் போரில் தமிழர்கள் கொல்லப்பட்டதை தமிழீழ அமைப்புகள், ‘முள்ளிவாய்க்கால் நினைவு’ தினமாகக் கடைப்பிடித்து வருகின்றன.

இலங்கை அரசு இந்த நாளை போர் வெற்றி நாளாகக் கொண்டாடி வருகிறது. போரில் உயிர்நீத்த தமிழர்களின் நினைவுநாளைக் கடைப்பிடிக்கக் கூட இலங்கை அரசு அனுமதி மறுக்கிறது.

இலங்கை அரசு மட்டுமல்ல, முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு அஞ்சலி செலுத்த இங்குள்ள தமிழ் அமைப்புகளுக்கும் இடையூறுகள் எழத்தான் செய்கின்றன.

போர் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்தவிட்ட நிலையில் வரும் 29-ம் தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ளது? பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அரசாங்கங்கள் என்ன செய்துள்ளன என்பது தொடர்பாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் எமக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளதாவது,


இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து ஐ.நா எடுத்த நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா?

இலங்கை போரில் இனப்படுகொலைகள் நடப்பதற்கான அறிகுறிகள் போருக்கு முன்பே இருந்தன.

உலக நாடுகளில் எங்காவது போர் நடைபெற்றால் வழக்கமாக மனித உரிமைக் குழுவினர் போர் நடக்கும் இடத்துக்குச் செல்வார்கள்.


போரில் நடக்கும் மனித உரிமை மீறல்களைக் கண்காணித்து சர்வதேசச் சமூகத்துக்குச் சொல்வார்கள். ஆனால், இந்திய அரசின் சூழ்ச்சியால் மனித உரிமைக்குழு இலங்கைக்குச் செல்வது 2008-லேயே தடுத்து நிறுத்தப்பட்டது.

உலகிலேயே முதன்முறையாக மனித உரிமைக்குழுவின் கண்காணிப்பு இல்லாத போராகத்தான் ஈழப்போர் நடந்தது.

2009-ல் இனப்படுகொலை நடப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாகச் சர்வதேச இனப்படுகொலைத் தடுப்பு உயர் அதிகாரி மே 14-ம் தேதி தகவல் அனுப்புகிறார்.

இந்திய ஐ.நா துணைப் பொதுச் செயலாளர் விஜய் நம்பியார் போர் நடைபெறும் இடத்துக்குச் செல்ல வேண்டும். ஆனால், அவர் அங்கு போகவில்லை.

வானிலை சரியில்லை எனச் சொல்லிவிட்டுப் போகாமல் தவிர்த்தார். விஜய் நம்பியாரின் அண்ணன் சதீஷ் நம்பியார்தான் இலங்கை இராணுவப் படைத் தளபதிகளுக்கான ஆலோசகர். விஜய் நம்பியாரும், சதீஷ் நம்பியாரும் சேர்ந்து கொண்டு ஐ.நா-வின் அனைத்துச் சட்ட விதிகளையும் மீறினர்.

இலங்கை அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டு போரை நிறுத்த நடக்கும் முயற்சிகளைத் தடுத்தார்கள்.

2009 மார்ச் 13-ம் தேதி மனிதகுலத்துக்கு எதிராக இலங்கை போர்க்குற்றம் புரிகிறது எனும் செய்தியை உலகுக்கு அறிவிக்க இருந்த மனித உரிமை கமிஷனின் பத்திரிகையாளர் சந்திப்பினைத் தடுத்தார்.

மேலும், இலங்கை அரசு செய்யும் குற்றங்களை புலிகள் மீது சுமத்த வேண்டுமென நெருக்கடி கொடுத்துப் பொய் தகவல்களைப் பத்திரிகைச் செய்தியில் இணைக்க வைத்தார்.

இதை ஐ.நா அதிகாரிகளே எதிர்த்திருக்கிறார்கள். இலங்கை மீதான சர்வதேச நெருக்கடிகளை விடுதலைப் புலிகள் மீது திருப்பிவிடுவதை விஜய் நம்பியார் செய்தார்.

புலிகளைக் குற்றவாளிகளாக்கி, இலங்கை அரசினை காப்பாற்றினர்.

இதன் தொடர்ச்சியாக 2015-ல் அமெரிக்காவினால் நிறைவேற்றப்பட்ட ஐ.நா-வின் தீர்மானம் இலங்கை அரசே அனைத்துக் குற்றங்களையும் விசாரிக்கும் என்ற அதிகாரத்தினை வழங்கியது.

அதாவது, குற்றவாளியே குற்றம் குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் விசாரணை செய்யும் என்றது.இதைவிட ஐ.நா-வின் மோசமான செயல்பாடு வேறு என்ன இருக்க முடியும்?



கைதுசெய்யப்பட்ட போர்க் கைதிகளின் நிலை என்ன?

2009 போரில் விடுதலைப் புலிகள் போர் கைதிகளாகக் கைது செய்யப் பட்டார்கள். இந்தக் கைதுகளை ஐ.நா மேற்பார்வையிடாமல் தவிர்த்ததால், 70,000 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள்.

மீதம் சிறையில் அடைக்கப்பட்ட 10,000-க்கும் அதிகமானப் போர்க் கைதிகள் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

போர்க்கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது சர்வதேச விதி. ஆனால், இந்த விதிகளை அமுல்படுத்த இலங்கையை ஐ.நா கோரவில்லை.

மாறாக, ஐ.நா-வின் மனித உரிமைத் தலைமை அதிகாரி அல்-ஹுசைன், போர்க் கைதிகளை அரசியல் கைதிகள் என்கிறார். இதன் மூலமாக இவர்களைக் காலவரையின்றிச் சிறையில் அடைக்கும் உரிமையை இலங்கைக்குத் தருகிறார். இது அப்பட்டமான சர்வதேச விதி மீறல். இதை ஐ.நா அதிகாரிகளே வெளிப்படையாகச் செய்கிறார்கள்.

இப்போதும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான சூழல்தான் நிலவுகிறதா?

போர் முடிவுக்குப் பிறகு அமெரிக்க, இந்தியா, இலங்கை ஆகிய மூன்று நாடுகளுமே தங்களுக்குச் சாதகமான சூழலைத்தான் அங்கு ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.

தமிழர்களுக்கான தீர்வில் எந்தக் கவனமும் செலுத்தவில்லை. போர் முடிந்த பிறகும் இலங்கை இராணுவத்தின் கண்காணிப்பில் தமிழர்கள் வைக்கப்பட்டு உள்ளனர்.

தமிழர் பகுதிகளில் இராணுவ நடவடிக்கைள் விலக்கப்படவில்லை. சித்திரவதைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற நிலையை இலங்கை அரசு எடுத்திருக்கிறது.

தமிழர்களுக்கிடையே கலகத்தை ஏற்படுத்தி வன்முறை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்றவற்றை கட்டவிழ்த்துள்ளது.

நிலத்தைத் திருப்பித் தராமல் இருப்பது, பொய் வழக்குகள் போடுவது, தொழில் செய்யவிடாமல் தடுப்பது, கடலில் மீன் பிடிக்கத் தடை விதிப்பது போன்ற தமிழர்களின் வாழ்வாதாரங்களை அழிக்கும் நடவடிக்கைளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

அதற்கு இந்திய அரசும் உரம் போட்டு வளர்க்கிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தமிழர்களிடையே இந்தியைத் திணித்து வருகிறது.

தமிழர்களிடையே இந்துத்துவா கொள்கைகளை வளர்க்க முயல்கிறது. ஈழத்தமிழர்களை சாதிகளாக உடைக்கும் திட்டத்தையும் இந்திய அரசு செய்து வருகிறது.

அமெரிக்கா இலங்கையோடு அதிக அளவு இராணுவ ஒப்பந்தங்களைப் போடுகிறது.

இலங்கை அரசோடு ஒத்துழைக்கும் நபர்களை வைத்து தமிழர்கள் மீது பாலியல் வன்முறைகள் நடத்தப்படுகின்றன.

இலங்கையும், மேற்கு உலகமும் புலம்பெயர் தமிழர்களின் அரசியல் போராட்டங்களை முடக்கிவைக்க முயற்சிகள் செய்கின்றன.

தமிழகத்தில் அமையவிருக்கும் புதிய ஆட்சி என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இலங்கை விவகாரத்தில் தி.மு.க. - அ.தி.மு.க இரண்டு கட்சிகளுமே போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

நாடாளுமன்றம் முடங்கும் அளவுக்கு இவர்கள் என்ன செய்துள்ளார்கள்? இனிவரும் ஆட்சியாளர்களாவது நாடாளுமன்றத்தை முடக்கவேண்டும்.

இதுவரை தமிழர்கள் நலன் கருதிப் போடப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போரில் பங்கெடுத்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களை இந்திய அரசு உடனடியாக விசாரிக்க வேண்டும்.வரவுள்ள புதிய அரசு இதற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இலங்கைக்கு ஆதரவாக உள்ள பொருளாதாரத் திட்டம், பாதுகாப்பு ஒப்பந்தம், வெளியுறவுக் கொள்கை ஆகியவற்றை மாற்றி அமைக்க வேண்டும். தமிழக அரசோடு விவாதித்து உருவாக்கப்பட வேண்டும்.

இலங்கை பல நாடுகளின் இராணுவத் தளமாக மாறி வருகிறது. இது இந்தியாவுக்குப் பேராபத்தைத் தரும்.

இலங்கை மீது சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த ஆட்சி அமைக்க உள்ள புதிய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment