August 29, 2015

புலம்பெயர்ந்தவர்களை சட்டவிரோதமாக கடத்துபவர்களை பிடிக்க சிறப்பு படை: சுவிஸ் அரசு அதிரடி அறிவிப்பு!

ஐரோப்பா நாடுகளுக்குள் புலம்பெயர்ந்தவர்களை சட்டவிரோதமாக கடத்தி வரும் கும்பலை பிடிக்க இத்தாலி மற்றும் ஜேர்மன் நாடுகளுடன் இணைந்து சுவிட்சர்லாந்து அரசும் சிறப்பு படை ஒன்றை அமைத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தி வருவது தொடர்க்கதையாகி வருகிறது.
கடந்த வியாழக்கிழமை அன்று ஆஸ்திரியா நாட்டு சாலையில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்றில் 71 மனித சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
புலம்பெயர்ந்தவர்களை கடத்தி வரும் கடத்தல்க்காரர்களை கைது செய்தால் மட்டுமே இதுபோன்ற அசம்பாவிதங்களை தவிர்க்க முடியும் என ஐக்கிய நாடுகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, இத்தாலி மற்றும் ஜேர்மனி நாடுகளுடன் இணைந்து சுவிட்சர்லாந்து அரசும் ஒரு அதிரடி சிறப்பு படையை அமைத்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பாக பேசிய சுவிஸ் மத்திய காவல் துறையின் துணை இயக்குனரான ஆலிவியர் பெகோரினி, ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களை கடத்தி வருவது ஒரு திட்டமிடப்பட்ட குற்றமாக மாறியுள்ளது.
இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கடத்தல் கும்பலை பிடித்து, கைது செய்து, தண்டனை வழங்கும் ஒரே நோக்கில் தான் இந்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த அதிரடி நடவடிக்கையை வெற்றிகரமாக செயல்படுத்த அனைத்து ஐரோப்பிய நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம் என ஆலிவியர் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு படை, டிசினோ மண்டலத்தில் உள்ள சியசோ நகரிலிருந்து தனது பணியை துவங்கும்.
இந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் இருக்கும் பொலிசார், வடக்கு இத்தாலியிலிருந்து டிசினோ மண்டலத்திற்குள் நுழைந்து பின்னர், அங்கிருந்து பேசில் மண்டலம் வழியாக ஜேர்மனி நாட்டிற்கு நுழைய முயல்பவர்களை அதிரடியாக கைது செய்வார்கள் என ஆலிவியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment