August 29, 2015

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முறைப்பாட்டை ஏற்க மறுக்கும் வவுனியா பொலிசார்!

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் முறைப்பாட்டினை ஏற்காது இரண்டு தினங்களாக வவுனியா பொலிசார் அலைக்கழித்து வருவதாக அக் கட்சியின் வன்னி அமைப்பாளர் என்.ரஜீபன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வன்னித் தலமைக் காரியாலயம் வவுனியா, குருமன்காடு பகுதியில் அமைந்துள்ளது. இந்த காரியாலயத்தின் பெயர் பலகையை கடந்த புதன்கிழமை இரவு கருத்துக்களை கருத்துக்களால் வெல்ல முடியாத கோழைத்தனமானவர்கள் சேதப்படுத்தி அழித்து விட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து ஒரு ஜனநாயக நாட்டில் தற்போது நல்லாட்சி எனக் கூறிக் கொள்ளும் இந்த அரசின் உடைய வவுனியா பொலிஸ் நிலையத்தில் வியாழக்கிழமை காலை முறைப்பாடு செய்ய சென்ற போது, யார் சேதப்படுத்தினார்கள் என்று தெரியுமா என்று பொலிசார் எம்மிடம் கேட்டனர். நாம் தெரியாது என்றதும் அப்படி ஆயின் முறைப்பாட்டை ஏற்க முடியாது. தமது பொறுப்பதிகாரியிடம் கேட்டு தான் பதிய வேண்டும். இப்பொழுது பொறுப்பதிகாரி இல்லை. மாலை வருமாறு கூறினர்.

அன்றைய தினம் மாலை மீண்டும் வவுனியா பொலிஸ் நிலையம் சென்ற போது அப்போதும் அதிகாரி இல்லை எனக் கூறி அவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்யாது திருப்பி அனுப்பினர். மறுபடி மறுநாள் வெள்ளிக்கிழமை சென்ற போதும் அதே பதில் தான் பொலிசாரால் வழங்கப்பட்டது. பொறுப்பதிகாரி இல்லை எனக் கூறி முறைப்பாட்டை அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்கள். குற்றவாளியை கண்டு பிடிக்க வேண்டிய பொலிஸ் குற்றவாளி யார் எனத் தெரிந்தால் தான் முறைப்பாட்டை பதிவு செய்ய முடியும் என்கிறார்கள். குற்றவாளிகளை நாமே கண்டு பிடித்து கொடுப்பதாக இருந்தால் பொலிசார் எதற்கு.

இது தான் இந்த நாட்டின் நல்லாட்சி. சாதாரணமாக தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகின்ற கட்சி என்ற காரணத்தினால் எமது முறைப்பாட்டையே பதிவு செய்ய முடியாத நிலையில் பொலிசார் இருக்கின்ற நிலையில் இந்த அரசாங்கத்திடம் இருந்து எமக்கான நிரந்தர தீர்வை எப்படி எதிர்பார்க்க முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments:

Post a Comment