August 15, 2015

சோகத்திலிருந்து மீண்டெழுந்து நிமிர்ந்த தலையுடன் வீரியம்மிக்க ஓர் அரசியல் பாதையைத் தெரிந்தாகவேண்டும் - தமிழ் பெண்கள் அமைப்பு யேர்மனி!

உலகில் எந்த ஒரு இனத்தினதும் விடுதலை என்பது அவ்வினத்தில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றது என்பதிலேதான் தங்கியுள்ளது. அதனால்தான் தமிழீழ விடுதலையில் பெண்களின் வாழ்வியல் உரிமைகள் உயர்ந்த அங்கீகாரத்தையும், மதிப்பையும் பெற்றிருந்தது, மட்டுமல்லாமல் தேசியத் தலைவர் அவர்களது உயரிய சிந்தனையின் வெளிப்பாடாக தமிழீழப் பெண்கள் சமர்களம் வென்றவர்களாக விடுதலைப் போரின் ஓர் ஆக்க சக்திகளாக உருவெடுத்திருந்தார்கள்.

 ஈழத்தமிழரின் வரலாறு இரத்ததித்னாலும் , தசையினாலும் கண்ணீராலும் எழுதப்பட்ட என்றும் அழியாத வரலாற்றுத்தடமாக முள்ளிவாய்க்காலில் பதியப்பட்டு விட்டது. வரலாறு எம்மை எங்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கின்றதோ அந்த இடத்திலிருந்து நாம் அடுத்த கட்டப்பயணத்தை தொடரவேண்டும். வெற்றிடத்தில் இருந்து எதையும் ஆரம்பிக்க முடியாது. வரலாறு எம்மை மிகவும் கசப்பான இடத்தில் விட்டீருக்கின்றது.வரண்ட பெருவெளியில் அரசியல் பாலைவனத்தில் தனித்து விடப்பட்ட ஓரு புழுவாய் திக்கின்றி நெளியும் நிலையில் நாம் நிற்கின்றோம். ஆயினும் சோகத்திலிருந்து மீண்டெழுந்து நிமிர்ந்த தலையுடன் வீரியம்மிக்க ஓர் அரசியல் பாதையைத் தெரிந்தாகவேண்டும். அரசியலில் சோரம்போவோர் ,போவோருக்கு பிரியாவிடை சொல்ல வரலாற்று அண்னைக்கு வழிதெரியும். பொழுது போக்கு அரசியலும் எமக்கு வேண்டாம். துன்பப்படும் தமிழர்களை மீட்க அர்ப்பணிப்புள்ளவர்களே தேவை .

 போரின் பின்பான காலங்களில் தமிழீழத்தில் சிறீலங்கா இராணுவத்தால் திட்டமிட்ட ரீதியில் பெண்கள்மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. திட்டமிட்ட முறையில் கருத்தடைகள், பாலியல் ரீதியான தொல்லைகள், இனக்கலப்பிற்கு தூண்டுதல், போன்ற கொடுமைகள் நிகழ்ந்து வருகின்றது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகளாகவும், ஆதரவற்றவர்களாகவும், உளவியல்பாதிப்புக்கு உட்பட்டவர்களாகவும் அலைகின்ற நிலைமையே உள்ளது. இவ் அவலங்களுக்கெதிராக குரல் கொடுக்க இராணுவ அடக்குமுறைக்குள் சிக்கியிருக்கும் மக்களால் முடிவதில்லை.

அன்பான உறவுகளே! தமிழ்ப் பெண்களாகிய நாம் உலகப் பெண்ணினத்துக்கு ஓர் அரிய செய்தியை கூறுவோம். தமிழீழப்பெண்கள் எத்தகைய அடக்குமுறைக்கும் எதிராகக் குரல் கொடுக்கக்கூடியவர்கள் என்பதையும், ஓர் அறிவார்ந்த சமூகம் என்பதையும், உலகில் எங்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றாலும் எதிர்த்துக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் என்பதையும் உணர்த்துவோம். தமிழ்ப் பெண்களாகிய எமது நிறைவான உரிமைகள் தமிழீழ விடுதலையுடன் கூடியதாகவே இருக்கின்றது என்ற உண்மையை உலகிற்கும், மானுடத்தை நேசிக்கும் அமைப்புகளுக்கும் புரியவைப்போம். எமது பலத்தை நிரூபிப்பதோடு தமிழினவழிப்புப் செய்த சிறீலங்கா அரசையும் நியாயத் தீர்ப்புக்கு உட்படுத்துவோம்.

அந்தவகையிலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் வேட்பாளர்களாக நிற்கும் கோகிலவாணி  மற்றும் திருமதி பத்மினி சிதம்பரநாதன் அவர்களுடன்  ஏனைய  பெண்களும்  தமிழீழ விடுதலையின் குறியீடாகவும் தமிழ் பெண்களின் உணர்வுகளை புரிந்தவர்களாகவும் தம்மை அடையாளப்படுத்தி  நிற்கின்றார்கள்.

தமிழ் தேசிய அரசியலில் நேர்மையாகவும் உண்மையாகவும் சேவையாற்றம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியே தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகின்றோம்.


தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தமிழ்ப் பெண்கள் அமைப்பு – யேர்மனி.

No comments:

Post a Comment