தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள்
முன்னணி கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த 31ம் திகதி சாவகச்சேரி பஸ் நிலையத்தில் தேர்தல் துண்டு பிரசுரங்களை விநியோகித்து கொண்டிருந்த போது அவர்களை சாவகச்சேரி பொலிசார் கைது செய்ய முற்பட்டனர்.அதன் போது தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவருக்கும் பொலிசாருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது. அந்த சம்பவம் தொடர்பிலேயே பொலிசாரினால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. பொலிசாரின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தமை, தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறி துண்டு பிரசுரங்களை விநியோகித்தமை ஆகிய குற்றங்களை முன்வைத்தே வழக்கு தாக்கல் செய்யபப்ட்டது.
அது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நீதிமன்றில் எடுத்து கொள்ளப்பட்ட போது தாம் தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டுள்ளதால் தேர்தலுக்கு பின்னர் தவணையிடுமாறு கஜேந்திரகுமார் தரப்பில் நீதிமன்றில் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கினை எதிர்வரும் 29ம் திகதிக்கு ஒத்திவைத்தது. அத்துடன் சம்பவம் தொடர்பான வாக்குமூலத்தை எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் பொலிஸ் நிலையத்தில் அளிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.பொலிஸ் நிலையத்தில் இன்று அல்லது நாளைக்கு இடையில் வாக்கு மூலத்தை பதிய வேண்டும் என பொலிஸ் தரப்பால் நீதிமன்றில் கோரப்பட்டது.தேர்தல் பணிகள் உள்ளதனால் தேர்தல் காலத்தில் வாக்குமூலத்தை பதியாது தேர்தல் முடிவடைந்த பின்னர் வாக்குமூலம் அளிப்பதாக கஜேந்திரகுமார் தரப்பினர் கேட்டதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், எதிர்வரும் 25ம் திகதிக்கு முன்னர் வாக்குமூலத்தை பதியுமாறு கூறியது.
No comments:
Post a Comment