August 15, 2015

பாராளுமன்றத் தேர்தலும் தமிழர்களது எதிர்காலமும்! – ம.செந்தமிழ்!

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அடக்குமுறை எண்ணங்களின் பிரதிபலிப்பாக உருவாக்கப்பட்டிருக்கும் அரசியலமைப்பின் அடிப்படையில்
செயற்படும் சிறிலங்கா அரச இயந்திரத்திற்கான தேர்தல் களம் என்றும் தமிழர்களாகிய எமது தேசிய அபிலாசைகளை பூர்த்திசெய்யும் மார்க்கமாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை.
இருந்தும் எமது பிரதிநிதித்துவத்தினை எமது உரிமைப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளிடம் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதற்காகவும், தமிழ்த் தேசியத்தின் வழிநின்று வரலாறாகிய, மாமனிதர்களான ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, சிவநேசன் மற்றும் நிமலராஜன், சிவராம், நடேசன் ஆகியோரின் இலட்சியப்பாதையில் நடைபோடுபவர்களை மறந்தும் கூட கைவிட்டுவிடக் கூடாது என்பதற்காகவும் எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இத்தேர்தலை சந்திக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்.
2009 மே 18 அன்று முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டதையடுத்து செனீவா மாமன்றத்தை நோக்கி எமது உரிமைப் போராட்டம் குவிமையப்படுத்தப்பட்டது. அனைத்துலக நாடுகளின் துணையுடன் சிங்கள பேரினவாத அரசபடைகள் நிகழ்த்திய நரவேட்டையின் கண்கண்ட சாட்சியங்களாக விளங்கும் எமதருமை தாயக உறவுகளின் பங்கேற்பும் புலம்பெயர் வாழ் இளையோர் உள்ளிட்டவர்களின் உறுதிமிக்க போராட்டமும் உலகப்பெரு வெளிக்கு எமது உரிமைப்போராட்டத்தை முன்னகர்த்தியுள்ளது.
இதனால், சர்வதேச அரசியலில் தவிர்க்க நினைத்தாலும் தவிர்த்துவிட முடியாதவாறு முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும் எமது நீதிக்கான போராட்டம் வீச்சுப்பெறுவதும் வீழ்ச்சியடைவதும் எமது கையில்தான் உள்ளது. இந்த இக்கட்டான சூழலலில்தான் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை தமிழர்களாகிய நாம் எதிர்நோக்கியுள்ளோம்.
ஒரே கொள்கை, ஒரே தலைமை என்ற நிலைப்பாட்டின் அடிப்படையில் எல்லா சக்திகளும் ஒற்றைப்புள்ளியில் இயங்கிவந்த நிலையில் 2009 மே-18 ஆயுத மௌனிப்பிற்குப் பின்னர் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டது. அரசியல் தளத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக பல கட்சிகளை இணைத்து உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது காலப்போக்கில் தமிழரசுக் கட்சியை முன்னிலைப்படுத்தியும், தமிழர்களது அரசியல் அபிலாசைகளை புறந்தள்ளி சிங்கள அரசினதும் பிராந்திய உலக வல்லரசுகளின் நலன்களை முதன்மைப்படுத்தியும் அதன் தலைமைகள் செயற்பட்டுவருவதே இந்நிலைக்கு காரணமாகும்.
நாற்பத்தையாயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களதும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்களதும் உயிர்த்தியாகத்தின் அடித்தளத்தில் பலம்பெற்றிருக்கும் எமது உரிமைப் போராட்டத்தை த.தே.கூட்டமைப்பின் அடிபணிவு அரசியலானது சலுகைகளுக்கான போராட்டமாக பலவீனப்படுத்தியுள்ளது.
இந்நிலையே, எமக்கான அரசியல் தலைமையினை மீழ் உருவாக்கம் செய்யும் சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. தமிழர்களது பாராளுமன்றப் பிரதிநிதித்துவமானது பௌத்த சிங்கள மேலாதிக்கம் நிறைந்த பாராளுமன்றத்தில் எதுவித தாக்கத்தையும் ஏற்படுத்திவிடப்போவதில்லை என்ற போதிலும், அனைத்துலக இராசதந்திர தளத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தும் வலிமைபெற்று விளங்குகின்றது.
கடந்த காலங்களில் நாம் எதிர்கொண்டதற்கு முற்றிலும் மாறான சூழலில் இத்தேர்தல் களம் அமைந்துள்ளது. பௌத்த சிங்களப் பேரினவாத அரசிற்கு எதிரான முழக்கங்களை முன்வைத்தே இதுவரை தேர்தல்களை நாம் எதிர்கொண்டிருந்த நிலையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களமாக இத்தேர்தல் அமைந்துள்ளது.
யாரை வெற்றிபெற வைப்பது, யாரை தோற்கடிப்பது என்பது மிக முக்கியமாகும். முன்னரைப் போன்று தமிழீழத் தேசியத் தலைமையால் உருவாக்கப்பட்டது என்ற ஒற்றைக் காரணத்திற்காக த.தே.கூட்டமைப்பு சார்பில் போட்டியிடுபவர்களை கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்துவிட முடியாத நிலையை அவர்களாகவே ஏற்படுத்தி விட்டார்கள்.
எமது அரசியல் அபிலாசைகள் வென்றெடுக்கப்பட வேண்டுமாயின் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதி கிடைத்தேயாக வேண்டும். அதனடிப்படையில் எங்கள் வாழ்வை நாமே தீர்மானிக்கும் சுயநிர்ணய உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு வரலாற்று காலம்தொட்டு நாம் வாழ்ந்துவரும் எமது மரபுவழித்தாயகம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.
இவை சாத்தியப்பட வேண்டுமாயின், நடைபெற்ற இனப்படுகொலை குறித்த சர்வதேச சுயாதீன விசாரனை நடைபெற வேண்டும். சுதந்திர தமிழீழம் குறித்த பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
இதற்கு ஆதரவாக செயற்பட்டுவருபவர்களையும், குரலெழுப்பி வருபவர்களையும் வெற்றிபெற வைப்பதுடன் நின்றுவிடாது இதற்கு எதிராக செயற்படுபவர்களை இனம்கண்டு தோற்கடித்தேயாக வேண்டும்.
தேர்தல்காலத்து புரட்சிவாதிகளாக புலிவேசம் தரித்து நீட்டிமுழங்கும் த.தே.கூட்டமைப்பினர் அடுத்த தேர்தல்வரை இவற்றை வசதியாக மறந்துவிடுவதும் அவர்களை பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என்று சிங்களத்தின் குரலாக ஒலிப்பதும் கடந்த ஆறு ஆண்டுகளில் நாம் கண்டவையே.
தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்.
திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை குறித்து சர்வதேச சுயாதீன விசாரனை நடத்தப்பட வேண்டும்.
தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.
என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சமரசம் ஏதுமின்றி கடந்த ஆறு ஆண்டுகளாகப் போராடிவருகின்றார்கள். இதன்காரணமாகவே இவர்களுக்கான ஆதரவென்பது பல்கிப்பெருகிவருகின்றது.
புலம்பெயர்வாழ் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவுநிலையானது இத்தேர்தல் முடிவுகளின் கணிசமான செல்வாக்கினை செலுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இதுவரை காலமும் புலம்பெயர்வாழ் தமிழர்கள் தேர்தல்களில் பெரிதும் நாட்டம் கொண்டிருந்ததில்லை. சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்களின் தமிழர் விரோதப்போக்கு நாளடைவில் எமது உரிமைப் போராட்டத்தை பலவீனப்படுத்துமளவிற்கு வலுவடைந்து பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதன் விளைவே புலம்பெயர்வாழ் தமிழர்களை இம்முறை களத்தில் இறக்கியுள்ளது.
புலம்பெயர்வாழ் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு தமது ஆதரவினை வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்க விடையமாக அனைவராலும் உற்றுநோக்கப்படுகின்றது. புலம்பெயர்வாழ் தமிழர்கள் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் இவ்வாதரவு செயற்பாட்டை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றார்கள்.
இது ஒருபக்கம் இருக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் தவறான செயற்பாடுகளுக்கு பெருமதிப்பிற்குரிய முதல்வர் விக்னேஸ்வரன் அவர்களின் நிலைப்பாடே சான்றுபகரும்.
‘நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல் வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றனர்.
அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள்.
எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக்கூடிய, விலைபோகாதவர்களை தெரிவுசெய்யுங்கள்.’ இவ்வாறு முதல்வர் விக்னேஸ்வரன் அவர்கள் கூறியுள்ளதில் இருந்தே அவர்சார்ந்த த.தே.கூட்டமைப்பின் நிலைப்பாட்டினை நாம் அறிந்துகொள்ள முடியும்.
தமிழ்த்தேசிய வாதிகள் வெற்றியும், தமிழினத் துரோகிகளின் தோல்வியுமே மாற்றத்திற்கான மாற்றத்தினை உருவாக்கும்.
ஆகவே,
எமது அன்பான மக்களே! நீங்கள் இடப்போகும் புள்ளடியானது நீதிக்கான எங்கள் உரிமைப்போராட்டத்தின் வீழ்ச்சிக்காக அல்லாது எழுச்சிக்கானதாக அமையட்டும்!
“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.”
ஈழதேசம்

No comments:

Post a Comment