எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இறுதிக் கட்ட யுத்தத்தின்போது
இடம்பெற்ற போர்க்குற்றங்கள் உட்பட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் இணக்கம் தெரிவிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருப்பதாக சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது.
இறுதிக்கட்ட யுத்தத்துடன் தொடர்புபடாத சிறிய சம்பவங்கள் தொடர்பில் குற்ற வழக்குத் தொடர்வதற்கான முன்மொழிவுகளை மாத்திரமே ஸ்ரீலங்கா அரசாங்கம் இதன்போது சமர்ப்பிக்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாக அந்த அமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இதனால் இறுதிக்கட்ட போரின் போது இடம்பெற்றதாகக் கருதப்படும் பாரதூரமான யுத்தக் குற்றங்களை விசாரிப்பதும், குற்றம் இழைத்தவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வதும் சிரமமான காரியங்களாக இருக்கும் என்றும் சர்வதேச நெருக்கடிக் குழு தெரிவித்துள்ளது.
‘தேர்தல்களுக்கு மத்தியில் ஸ்ரீலங்கா’ என்ற தலைப்பில் இன்றைய தினம் சர்வதேச நெருக்கடி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீலங்கா அரசாங்கம் இழைத்த யுத்தக் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை தமிழர் தரப்பாலும் மனித உரிமை ஆர்வலர்களாலும் முன்வைக்கப்பட்டு வரும் சூழலில், அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியங்கள் குறைவாகவே இருப்பதாகத் தெரிவித்து தனது அவதானங்களை முன்வைத்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன தலைமையிலான நல்லாட்சிக்கான கூட்டணி அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம், அரசியல் சாசனச் சீர்திருத்தம், மீள்நல்லிணக்கத்துக்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முதலான பல்வேறு தலைப்புகளின்கீழ் இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் இந்த அறிக்கையில் ஆராயப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் அரசியல் மற்றும் சமூகம்சார் விடயங்களில் இலங்கை இராணுவம் செலுத்தி வந்த ஆதிக்கம் குறைவடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள நெருக்கடிக் குழு, இருந்த போதிலும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல், மீள்குடியேற்றம் முதலான விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்களிடையே தொடர்ந்தும் விரக்தி நிலவுவதாகவும் தெரிவித்துள்ளது.
அத்துடன் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தற்போதைய கூட்டணி அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி இணக்கப்பாட்டுடன் செயற்பட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் தொடர்பில் தமிழ் மக்களுக்கிடையேயும், தமிழ் பொது அமைப்புக்கள் மத்தியிலும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளதாகவும் சர்வதேச நெருக்கடிக் குழு தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.


No comments:
Post a Comment