June 9, 2015

ரணிலிடம் காசுவாங்கி விட்டார்கள்: கூட்டமைப்பு எம்.பிக்களை போட்டுக் கொடுத்த விக்கி!

வடக்கில் மாகாணசபையை மீறி, சில தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் உதவியுடன் அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் புகார் கூறியிருக்கிறார் வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன். நேற்று மாலை ஜனாதிபதியுடன் நடத்திய
தனிப்பட்ட சந்திப்பின் போதே இந்த புகாரை தெரிவித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் வடக்கு முதல்வரிற்குமிடையில் ஏற்பட்ட லடாயை தொடர்ந்து, ரணில் நேரடியாக களத்தில் இறங்கி பல திட்டங்களை நடத்தி வருகிறார். ஐதேக வின் விஜயகலா ஊடாகவும், வடமாகாணசபை தவிர்ந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்த திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வந்தன. இதில் நடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் வினோநோகராதலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் ஊடாகவும் சில திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. சில வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடாகவும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இது வடக்கு முதல்வரை சீற்றமடைய வைத்துள்ளது. நேற்று ஜனாதிபதியை சந்தித்தபோது, இது பற்றி புகார் கூறியிருக்கிறார். முதலமைச்சரின் குற்றச்சாட்டுக்களை கேட்ட மைத்திரி, தான் இந்த விடயங்களை இதுவரை அறிந்திருக்கவில்லையென்றும், பிரதமருடன் பேசுவதாகவும் கூறியுள்ளார். அத்துடன், பிரதமருடன் மோதல் போக்கை கைவிட்டு சுமுகமான உறவை பேணுமாறும், அவ்வாறு இல்லாவிட்டால் இதுபோன்ற சிக்கல்கள் தோன்றுமென்றும் ஆலோசனை கூறியுள்ளார்.
இதுதவிர, நேற்றைய சந்திப்பில் வடக்கில் முதலமைச்சர் நிதியம் ஒன்று அமைக்கப்படுவதற்கும் ஜனாதிபதி அனுமதியளித்துள்ளார். எனினும், இந்த நிதியம்த்தின் செயற்பாடுகளை மத்திய அரசு கண்காணிப்பதுடன், மத்திய அரசே கணக்காய்வு செய்யும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment