June 7, 2015

கனிமொழியும் கருணாநிதியும் மௌனத்தை கலைக்க வேண்டும்: அனந்தி

இறுதி யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள், இலங்கைப் படையினரிடம் சரணடைந்த விடயம் தொடர்பில், தாம் வகித்த பங்கு குறித்து, தமது மௌனத்தைக் கலைக்குமாறு, வடமாகாண சபை உறுப்பினரும் முன்னாள் தமிழீழ
விடுதலைப் புலிகளின் அரசியல்த்துறை உறுப்பினர் எழிலனின் மனைவியுமான அனந்தி சசிகரன் கருணாநிதி மற்றும் அவரது மகள் கனிமொழியிடமும் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் வைத்து கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 16ம் திகதி இரவு சுமார் 08.00 மணிளவில், கனிமொழியுடன் கலந்துரையாடிய பின்னரே, தனது கணவரான எழிலன், படையினரிடம் சரணடையத் தீர்மானித்ததாக அந்த செவ்வியில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இதனை நான் கூறுவது இது முதல் முறை அல்ல எனக் குறிப்பிட்டுள்ள அவர், மறுபக்கத்தில் இருந்து இதுவரை இதற்கு எந்தவொரு பதிலும் கிடைக்கப் பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கருணாநிதி மற்றும் கனிமொழி இது குறித்த உண்மைகளை உலகுக்குக் கூற இதுவே சரியான நேரம் எனவும் அனந்தி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற விடுதலைப் புலிகளின் சரணடைவு என்பது சர்வதேசத்தின், குறிப்பாக இந்தியாவின் ஏற்பாட்டில் இடம்பெற்றதாகவும், அவ்வாறு இலங்கை இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் போயுள்ள தனது கணவரும் விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளருமான எழிலன் எனப்படும் சின்னத்துரை சசிதரனை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும் என்றும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற ஆட்கொணர்வு மனு தொடர்பான வழக்கில் கடந்த வியாழனன்று சாட்சியமளித்த வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment