May 6, 2015

புதிய அரசாங்கத்துக்கு உதவுவோம்: அவுஸ்திரேலிய அமைச்சர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையில் நல்லுறவு இருக்கின்றது என்று தெரிவித்த அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் பீட்டர் டட்டன், இலங்கையில் முன்னெடுக்கப்படும்.


நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய அமைச்சர், தனது விஜயத்தை முடித்துகொண்டு நாடு திரும்புவதற்கு முன்னர், கொழும்பு, சினமன் கிராண்ட் ஹோட்டலில் இன்று மாலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மாநாட்டில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில்,

இலங்கையின் புதிய அரசாங்கத்துக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கும் இடையில் நல்லுறவு இருக்கின்றது. இலங்கையில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அவுஸ்திரேலியா தொடர்ந்து உதவும், இவை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைத்தேன்.

அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வருவதை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஒருபோதும் ஏற்காது. அவ்வாறு வந்து, நவுறு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு குழுவினர் கம்போடியாவுக்கு செல்வதற்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அந்த நாட்டுடன் இருக்கின்ற புரிந்துணர்வின் பிரகாரமே இவர்களை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

ஏனைய நாடுகளின் அரசாங்கங்களுடன் மட்டுமன்றி இலங்கை அரசாங்கத்துடனும் எமக்கு பல் துறைகளிலும் நல்லுறவு இருக்கின்றது என்று சுட்டிக்காட்டிய அவர், நவ்று மற்றும் பப்புவா நிவ்கினியா தீவுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு தேவையான கல்வி, வைத்தியசாலை, சுகாதாரம் உள்ளிட்ட சேவைகளையும் நாம் செய்துகொடுத்துள்ளோம் என்றார்.

அதற்கு மேலதிகமாக அவர்களுக்கு தொழில் வாய்ப்புகளுக்கான பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இவ்வாறான நிலையில், அவுஸ்திரேலியாவுக்குள் அகதிகளாக நுழைவதை தடுப்பதற்காக புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிஸார் இணைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment