சிறிலங்கா இராணுவத்தினருக்கான குதிரைகளை, பாகிஸ்தானில் இருந்து ஏற்றி வந்த, சிறிலங்கா விமானப்படையின், சி-130 விமானம், நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை அடுத்து, இந்தியாவின் புனே விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
இஸ்லாமாபாத்தில் இருந்து 8 குதிரைகள மற்றும் 13 பேருடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போதே, நடுவானில் கோளாறு ஏற்பட்டது.
உடனடியாக இந்த விமானம் நேற்றுமாலை 5.40 மணியளவில் புனே அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
அந்த விமானத்தில், விமானிகளுடன், 8 சிறிலங்கா படையினர், மற்றும் ஒரு பாகிஸ்தானிய இராணுவ மேஜர் (கால்நடை மருத்துவர்) உள்ளிட்ட 13 பேர் இருந்தனர்.
இந்த விமானத்துக்கு மாற்று உதிரிப்பாகங்கள் சிறிலங்காவில் இருந்து கொண்டு வர வேண்டியுள்ளதால், புனே விமான நிலையத்தில், சிறிலங்கா விமானப்படை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் இராணுவம், சிறிலங்கா இராணுவப் பயிற்சி அகடமிக்கு அன்பளிப்பாக வழங்கிய குதிரைகளை ஏற்றிவந்த போதே, சிறிலங்கா விமானப்படை விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய்க் கசிவு ஏற்பட்டு விமானத்தின் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதையடுத்து, புனே விமானநிலையத்தில் தரையிறங்க அவசர உதவி கோரப்பட்டது.
புனே விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக புதுடெல்லியில் உள்ள இந்திய விமானப்படைத் தலைமையகத்துக்கு தகவல் அனுப்பினர்.
அதையடுத்து, இந்தியாவின் உள்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐபி மற்றும் குடிவரவுப் பகுதியினரின் பாதுகாப்பு பரிசோதனைகளின் முடிவில் சிறிலங்கா விமானத்தை தரையிறக்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதுவரையில், சிறிலங்கா விமானப்படை விமானம் புனே நகருக்கு மேலாக வட்டமிட்டுக் கொண்டிருந்தது. மாலை 5.40 மணியளவில், விமானம் புனே விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
சிறிலங்கா விமானப்படையின், இந்த சி-130 விமானம் அண்மையில் நேபாளத்துக்கு உதவிப் பணியாளர்களை ஏற்றிச் சென்ற போதும், தொழில்நுட்பக் கோளாறு எற்பட்டு, அங்கேயே சில நாட்கள் தரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment