இலங்கையில் தமிழினம் படும் அவலங்கள் குறித்து இதுவரை பத்திற்கும் மேற்பட்ட ஆவணப் படங்களை இயக்கிய இயக்குனர் கௌதமன் அவர்களின் படைப்பாக்கத்தில் “இது இனப்படுகொலையா? இல்லையா?” என்கிற புதிய ஆவணப்படம் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.
உலகத் தமிழர் பேரமைப்பின் ஏற்பாட்டில் வரும் 13.05.2015 புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் சென்னை வடபழனியில் உள்ள ஆர்.கே.வி ஸ்டூடியோவில் (கமலா திரையரங்கம் அருகில்) ஆவணப்படம் வெளியீடு, திரையிடல் நடைபெற ஏற்பாடாகி உள்ளது.
முதன் முறையாக ஈழத் தமிழினத்துக்காக குரல் கொடுக்கும் அனைத்து தலைவர்களும் ஒரே மேடையில் ஓரணியில் நின்று ஆவணப் படத்தை வெளியிட்டு வைக்கவுள்ளமை இதன் சிறப்பம்சமாகும். அனைத்து மாணவ இயக்கங்களும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்களும் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.
ஆவணப் பட வெளியீடு தொடர்பில் இயக்குனர் கௌதமன் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் ஈழத்தில் வாழவில்லை, ஆண்ட மண் என்று தொடங்கும் இந்த ஆவணப்படம் முழுக்க முழுக்க தமிழில் வெளியாகிறது.
எல்லாளன், பண்டாரவன்னியனால் ஆளப்பட்டு வந்த எங்கள் நிலம் பின் போர்த்துக்கீசர், ஒல்லாந்தர், வெள்ளையர்களால் பிடுங்கப்பட்டு மறுபடியும் எங்கள் நிலத்தை விட்டு அவர்கள் வெளியேறும் போது, எங்களிடம் கொடுக்காமல் சிங்கள அதிகார வர்க்கத்திடம் கொடுக்கப்பட்டதால், ஈழத்தில் ஓடிய இரத்த வரலாற்றை, இனப்படுகொலைகளை ஆவணமாக்கி இருக்கிறேன்.
தந்தை செல்வா காலத்துக்கு முன்பும், பின்பும் கிடைத்த ஆவணங்களை வைத்து அப்போதும் நிகழ்ந்த இனப்படுகொலைகளுடன், ஆயுதமேந்திய போராட்டத்தில் பிரபாகரன் காலத்தில் நிகழ்ந்த படுகொலைகளையும் முள்ளிவாய்க்கால் வரை வரிசைப்படுத்தி தொகுத்து ஆவணமாக்கி உள்ளேன்.
இனப்படுகொலை வரலாற்றைச் சொல்வதன் ஊடாக இந்த ஆவணப்படம் இளைய சமுதாயத்துக்கு பெரியதொரு அறிவாயுதமாக இருக்கும். இந்த ஆவணப்படமானது இளைஞர்களை உட்கார விடாமல், எப்போதும் விடுதலையை நோக்கியே ஓடிக் கொண்டிருக்கின்ற ஒரு பெரிய உந்து சக்தியாக நிச்சயம் இருக்கும்.
நான் ஒரு தமிழனாக சொல்கிறேன், எங்கள் தேசம் விடுதலை அடைவது உறுதி. விடுதலை அடைந்த பின்பும் கூட இந்த படைப்பு என்பது எங்களின் இளைய தலைமுறையின் கைகளில் எத்தனை நூறாண்டுகளானாலும் சரி என்றும் வேராகவும், விதையாகவும் இருக்கும்.
நான் ஒரு படைப்பாளியாக இருப்பதனால் இந்த ஆவணப்படம் எம் இனத்துக்கான விடுதலைப் பயணத்துக்கு நிச்சயம் ஒரு மைல் கல்லாக இருக்கும். என நான் உறுதியாக நம்புகிறேன்.
இனப்படுகொலைக்கு எதிரான இந்த ஆவணத்தை அறிவாயுதமாக ஏந்த தமிழின உணர்வாளர்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.
No comments:
Post a Comment