திருநெல்வேலி மாவட்டம்
சிவகிரி, சங்கரன் கோயில் வருவாய் வட்டங்களில் 12,000 ஏக்கர் நிலங்களுக்குப்
பாசன நீர் வழங்கி வந்த செண்பகவல்லி அணை, 1965 ஆம் ஆண்டு ஏற்பட்ட
வெள்ளத்தில் உடைந்துவிட்டது. இந்த அணை மேற்குத் தொடர்ச்சி மலையில் சிவகிரி
அருகே இருந்தாலும் கேரள எல்லைக்குள் உள்ளது. இந்த அணை கட்டி தண்ணீரைத்
தமிழகம் பயன்படுத்திக் கொள்வது தொடர்பாக சிவகிரி சமீன்தாருக்கும்
திருவிதாங்கூர் மகாராஜாவுக்கும் இடையில் 1733 ஆம் ஆண்டு ஒப்பந்தம்
ஏற்பட்டது. ஆனால் 1965 ல் ஏற்பட்ட உடைப்பைச் சாக்காகப் பயன்படுத்திக்
கொண்டு கேரள அரசு மீண்டும் தமிழகம் அங்கு அணை கட்டிக் கொள்வதைத் தடுத்து
வருகிறது.
இந்த
அணை கட்டுவதற்கு ரூ. 10,29,732 செலவாகும் என்று கேரளப் பொதுப்பணித்
துறையினர் திட்டமதிப்பீடு தந்தனர். அதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு 1986ஆம்
ஆண்டு மார்ச் மாதம் முதல் தவணையாக ரூ. 5,15,000 காசோலை கேரள அரசுக்கு
அனுப்பி வைத்தது. ஆனால் அதைப் பெற்றுக் கொண்ட கேரள அரசு அணை கட்டும்
முயற்சியில் ஈடுபடவில்லை. எனவே, சிவகிரி விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதி
மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம்
3.8.2006 அன்று அளித்த தீர்ப்பில், குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த அணை
கட்டி முடிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டது.
ஆனால்,
அதன் பிறகு கேரள அரசு தமிழக அரசு கொடுத்திருந்த தொகையைத் திருப்பி
அனுப்பிவிட்டது. இன்று வரை அந்த அணை கட்டுவதற்கு ஒப்புதல் வழங்காமல்
இழுத்தடிக்கிறது. மன்னர்கள், சமீன்தார்கள் காலத்திலிருந்த ஞாய உணர்வும்,
மனித நேய உணர்வும் மக்களாட்சி காலத்தில் இல்லாமல் போனது பெரும் துயரம்!
பல்வேறு
விவசாயிகள் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் செண்பகவல்லி அணைத்திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி தொடர்ந்து போராடி வருகின்றன. இதன் ஒரு
பகுதியாகத்தான் செண்பகவல்லி அணை திட்டத்திற்கு அனுமதி வழங்கி ஒத்துழைப்பு
நல்குமாறு கேரள அரசை வலியுறுத்தி 31.5.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் தமிழ்த்தேசியப் பேரியக்கம்
ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி
கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு உறுப்பினரும் புளியங்குடி
பகுதியைச் சேர்ந்த செயலாளருமான தோழர் க. பாண்டியன் புளியங்குடி கோட்ட
காவல்துறை துணைக் கண்காணிப்பாளருக்கு 2.5.2015 அன்று விண்ணப்பம்
கொடுத்தார்.
பல்லாயிரக்கணக்கில்
ஆர்ப்பாட்ட அழைப்புத் துண்டறிக்கை அச்சிட்டு பல பகுதிகளிலும்
வழங்கப்பட்டுள்ளது. சுவரொட்டிகள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின்
பல்வேறு பகுதிகளிலிருந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள புறப்பட்டு வர
ஆயத்தமாகி விட்டனர். சிவகிரி, புளியங்குடி பகுதி விவசாயிகளும் இந்த
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள ஆர்வமாக இருந்தனர். கடைசி நேரத்தில்
30.5.2015 மாலை 4.00 மணியளவில் புளியங்குடி காவல்துறை துணைக்
கண்காணிப்பாளர் திரு. வானமாமலை அவர்கள் மேற்படி செண்பகவல்லி கோரிக்கை
ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து கடிதம் கொடுத்துள்ளார். முன்கூட்டியே
கொடுத்தால் நீதிமன்றத்திற்குப் போய்விடுவோம் என்று கருதிய காவல்துறை சூது
மதியோடு கடைசி நேரத்தில் அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்துள்ளது.
மக்களுக்குச் சட்டம் வழங்கும் நீதிமன்ற வாய்ப்புகளைக் குறுக்கு வழியில்
தடுத்துள்ளது காவல்துறை.
காவல்துறை
என்பதை விட தமிழக அரசுதான் இந்த அனுமதி மறுப்பின் பின்னணியில் இருக்கிறது.
கேரள அரசிடம் கோரி செண்பகவல்லி அணையைப் புதுப்பித்து இலட்சக்கணக்கான
மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் அந்தத் தண்ணீரைக் கொண்டு வரும்
முயற்சியில் ஈடுபடாத தமிழக அரசு, அக்கோரிக்கையை வைத்து சனநாயக வழிமுறையில்
தமிழ்த்தேசியப் பேரியக்கம் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் செய்வதைத்
தடுத்துள்ளது. இச்செயல் அஇஅதிமுக அரசு தமிழினத்திற்குச் செய்யும்
துரோகமாகும்.
துணைக்கண்காணிப்பாளர்
கொடுத்துள்ள அனுமதி மறுப்புக் கடிதத்தில் செண்பகவல்லி தண்ணீர் பிரச்சினை
இரண்டு மாநிலப் பிரச்சினை என்றும் அதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட
வாய்ப்புள்ளது என்றும் பொதுமக்களுக்குப் பாதிப்பு வரும் என்றும் காரணங்கள்
கூறப்பட்டுள்ளன. இந்தக் காரணங்கள் அனைத்தும் போலியானவை. இப்படி எந்தப்
பிரச்சினையும் வருவதற்கு வாய்ப்பில்லை. கடந்த பல ஆண்டுகளாக தமிழக மக்களின்
உரிமை பிரச்சினைகளுக்காகத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் இது போன்ற ஏராளமான
ஆர்ப்பாட்டங்களை, மக்கள்திரள் போராட்டங்களை நடத்தியுள்ளது. அப்போதெல்லாம்
எந்த வன்முறையும் ஏற்பட்டதில்லை.
மாநில
உரிமைகள் பிரச்சினையில் மற்ற மாநில அரசுகள் எப்படி இருக்கின்றன, அஇஅதிமுக
அரசு எப்படி இருக்கிறது என்பதற்கு இரண்டு சான்றுகளை மட்டும் நினைவு
கொள்ளலாம். மேகேதாட்டு அணை கட்ட தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதற்காக தமிழக
அரசையும் தமிழகத்தையும் கண்டித்து கர்நாடகத்தில் கன்னட இன அமைப்புகள் கடந்த
ஏப்ரல் 18ஆம் நாள் கர்நாடகத்தில் முழு அடைப்பு நடத்தின. முழு அடைப்பு
நடத்தும் போதே வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளின் தலைவர்கள்
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்து கோரிக்கை விண்ணப்பம்
கொடுத்தனர். அவர்களை அன்புடன் உபசரித்து வரவேற்ற கர்நாடக முதலமைச்சர்
தமிழக அரசுக்கும் தமிழகத்துக்கும் எதிராக அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும்
முழு அடைப்புப் போராட்டத்தைப் பாராட்டினார். அப்போராட்டம் தமது அரசுக்கு
வலிமை சேர்க்கும் என்று கூறினார்.
உச்ச
நீதிமன்றத் தீர்ப்புக்கு புறம்பாக முல்லைப் பெரியாறு அணையை உடைக்க
வேண்டுமென்றும், பிறகு புதிய அணைக் கட்டிக் கொள்ளலாம் என்றும் கோரிக்கை
வைத்து, கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முதலமைச்சர் பொறுப்பில் இருந்த போதே,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த அச்சுதானந்தன் கேரளத்தில்
மனிதச் சங்கிலி நடத்தியதை நாடறியும்.
ஆனால் தமிழகத்தில் அஇஅதிமுக அரசு செண்பகவல்லி கோரிக்கை ஆர்ப்பாட்டத்துக்குப் போலியான காரணங்களைக் கூறி தடை விதிக்கிறது.
கடந்த
மார்ச்சு ஏழாம் நாள் மேகேதாட்டு அணை கட்டுவதை நிறுத்தக் கோரி கர்நாடகம்
நோக்கி பேரணியாகப் புறப்பட தேன்கனிக்கோட்டையில் ஐயாயிரம் உழவர்கள்
திரண்டபோது, தடுத்து கைது செய்தனர். மாலையில் விட்டுவிட்டனர். ஆனால்
மறுநாள் அப்போராட்டத்தில் கலந்து கொண்ட உழவர்கள் மீது வழக்குப் பதிவு
செய்திருப்பதாக ஏடுகளுக்கு அறிக்கை கொடுத்தது அஇஅதிமுக அரசு. தொடர்ந்து
அஇஅதிமுக அரசு தமிழகக் கோரிக்கைகளை நடுவண் அரசிடம் வலியுறுத்திப்
பெறுவதற்கு அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டுவதற்கு மறுத்து வருகிறது.
மேற்கண்ட கோரிக்கைகளுக்காக அஇஅதிமுக கட்சியும் அதன் தலைமையில் உள்ள அரசும்
அரசியல் வழிப்பட்ட நடவடிக்கை எதிலும் ஈடுபடுவதில்லை. ஆனால்
அக்கோரிக்கைகளுக்காக சனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் திரள்
போராட்டங்கள் நடைபெறவும் அனுமதிப்பதில்லை.
செண்பகவல்லி
அணை கட்டுவதற்கான கோரிக்கை ஆர்ப்பாட்டத்தை அஇஅதிமுக அரசு தடை
செய்திருப்பதைத் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக்
கண்டிக்கிறேன். உயர் நீதி மன்றத்தில் இந்தத் தடையை எதிர்த்து மனு செய்து
நீதியைப் பெற்று வேறொரு நாளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத்
தெரிவித்துக் கொள்கிறேன். எனவே 31.5.2015 மாலை வாசுதேவநல்லூரில் நடைபெற
இருந்த செண்பகவல்லி அணை கோரிக்கை ஆர்ப்பாட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது
என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்போராட்டத்திற்கு அனைத்து வகையிலும்
துணை நின்ற அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்னணம்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.



No comments:
Post a Comment