June 1, 2015

உணர்ச்சி வார்த்தைகளை பேசி வடக்கு மக்களை தவறாக வழி நடத்தக் கூடாது!- துவாரகேஷ்வரன்!

கடந்த மூன்று தசாப்த காலமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டு வந்த மக்களை உணர்ச்சி வார்த்தைகளால் தவறாக வழிநடத்தி அவர்களை மீண்டுமொரு முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு செல்லக் கூடாது என வட மாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் துவாரகேஷ்வரன் தெரிவித்தார்.

வட மாகாண மக்கள் யுத்த சூழலில் இருந்து விடுபட்டுள்ள போதிலும் இன்று மேலும் பல இக்கட்டான சூழலில் இருந்து மீள முடியாமல் இருக்கின்றார்கள். அதற்கு சில அரசியல்வாதிகளும் ஆயுத குழுக்களும் கூட காரணம் எனலாம்.
கலாசார பாரம்பரியமிக்க வட மாகாணம் இன்று சீரழிந்து வருகின்றது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு என குற்றச்செயல்கள் மலிந்து போயுள்ளன. போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையும் வடக்கில் அதிகரித்து காணப்படுகிறது.
போதைப்பொருள் பாவனையும் கூட வடக்கில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரிக்க காரணம் எனலாம். எனவே அவ்வாறான குற்றச்செயல்கள் அதிகரிப்பதற்கான காரணங்களை கண்டறிந்து அவற்றை தடுத்து நிறுத்தி எமது கலாசார பாரம்பரியங்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
ஆனால், அதனை செய்யாமல் மென்மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை கைவிட வேண்டும். இன்று வடக்கில் இடம்பெறுகின்ற விடயங்களை சர்வதேசமே கூர்ந்து அவதானித்துக் கொண்டிருக்கிறது.
வட மாகாண மக்களுக்கு சுயநிர்ணய உரிமையினை வழங்க வேண்டும். அவர்களுடைய சுயாதீன செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் போன்ற கருத்துக்கள் சர்வதேச மட்டத்தில் வலுப்பெற்றுள்ள நிலையில், இங்கு நீதிமன்றங்கள் மீதும் பொலிஸ் நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படுவதானது எம் மீதான சர்வதேசத்தின் பார்வையை திசை திருப்புவதாக அமையும் என்ற நிலையேற்பட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் படுகொலையானது காட்டுமிராண்டித்தனமான கோரச் செயலாகும் என்பதற்கு இரு வேறு கருத்துக்கு இடமில்லை. ஆனால், அதற்காக நாம் முறையாக எமது எதிர்ப்பையும் அனுதாபங்களையும் தெரிவிக்க வேண்டும். மாறாக நீதிமன்றங்களின் மீதோ பொலிஸ் நிலையங்கள் மீதோ தாக்குதல்களை நடத்தக் கூடாது.
உண்மையில், குறித்த மாணவியின் படுகொலைக்கு நியாயம் வேண்டும். அந்த குற்றச்செயல் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்ற உணர்வுபூர்வமான வகையில் பலர் ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளார்கள். ஆனால் சில புல்லுருவிகளினால் அந்த நியாயமான போராட்டம் திசை திருப்பப்பட்டுள்ளது.
இதனால் இன்று அப்பாவியான பலர் சிறைக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இவ்வாறான புல்லுருவிகளை பொதுமக்கள் இனங்கண்டு செயற்பட வேண்டும். அத்தோடு அவ்வாறான மாய வலையில் இனியும் சிக்கி விடக் கூடாது. கௌரவமான இனமாக கருதப்பட்ட எமது இனத்தை நோக்கி ஐ.நா.சபை கேள்வி கேட்கும் அளவிற்கு இன்று நிலைமை மாற்றமடைந்துள்ளது.
புங்குடுதீவு மாணவியின் படுகொலையினை வைத்து அரசியல் செய்யாமல் அவ்வாறான செயற்பாடுகள் மீண்டும் ஏற்படாத வகையிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வட மாகாண அரசியல்வாதிகள் அங்குள்ள மக்களை சுயமாகவும், சுதந்திரமாகவும் சிந்தித்து செயற்படுவதற்கு இடமளிக்க வேண்டும் மாறாக, அவர்களை தவறாக வழி நடத்தக் கூடாது.
அதேபோன்று வட மாகாண மக்களும் சுயமாக சிந்தித்து தூர நோக்குடன் செயல்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment