May 18, 2015

அவுஸ். மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தமிழர் இனவழிப்பு நாள்1

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் தமிழர் இனவழிப்பு நினைவுநாள் நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுள்ளது.
ஸ்பிறிங்வேல் நகரமண்டபத்தில் திங்கட்கிழமை இன்று மாலை 6.30 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

இந்நிகழ்வில் பெருமளவில் மக்கள் கலந்து கொண்டு, முள்ளிவாய்க்கால் மண்ணில் மரணித்த எமது உறவுகளை நினைவு கூர்ந்ததுடன், இலங்கைத்தீவில் 1948 ம் ஆண்டு முதல் இனப்படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் உறவுகளையும், கனத்த நெஞ்சோடு நினைவேந்தல் செய்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு. கரன் மயில்வாகனம் மற்றும் தமிழ் ஏதிலிகள் கழக இணைப்பாளர் திருமதி. சிறிசாமி ஆகியோரின் தலைமையில் ஆரம்பமான நிகழ்வில், பொதுச்சுடரினை திரு. கொற்றவன் ஏற்றி வைத்து தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து அவுஸ்திரேலிய தேசியகொடியை, ஐக்கிய தமிழ் இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் திரு.சதீபன் ஏற்றி வைத்தார். தமிழீழ தேசிய கொடியை, தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு. கபிலன் ஏற்றி வைத்தார்.
காலங்காலமாக தமிழர் மேல் கட்டவிழ்த்து விட்டு வரும் இனப்படுகொலையில் மரணித்த உறவுகளுக்கான நினைவுச்சுடரினை, முள்ளிவாய்க்கால் மண்ணில் தனது உறவினர்களை பறிகொடுத்த திருமதி. நிசா ஏற்றி வைத்தார்.
நினைவுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, அனைத்து மக்களும் தமது உறவுகளுக்கான மலர் வணக்கத்தை செலுத்தினர்.
வரிசையாக காத்திருந்து அனைவரும் மலர் வணக்கம் செலுத்தியதை தொடர்ந்து, தாயக விடுதலைப் போரிலே,மரணித்த மாவீரர்களையும் பொதுமக்களையும் குறிப்பாக, முள்ளிவாய்க்கால் மண்ணிலே ஆறு வருடங்களுக்கு முன்னர் விதையாகிப் போன, எம்முறவுகளையும் நினைவில் இருத்தியும், தமிழர் விடுதலைக்காக உலகமெங்கும் மரணித்துப் போன ஈகியர்களின் நினைவுகளை சுமந்தும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அகவணக்கத்தை தொடர்ந்து திருமதி. மீனா இளங்குமரன் அவர்களின் நாட்டியாலய நடனப்பள்ளி மாணவனின்,“முள்ளிவாய்க்கால் மண்ணேவணக்கம்“என்ற பாடலுக்கு வணக்க நடனம் இடம்பெற்றது.
தொடர்ந்து தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு. கோகுலன் அவர்கள், முள்ளிவாய்க்கால் மண்ணில் நிகழ்ந்த அவலங்களை நினைவு கூர்ந்ததுடன், தாயகமக்களின் விடுதலைக்காக தொடர்ந்தும் குரல் கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
குறிப்பாக அரச படையினரிடம் சரணடைந்த போராளிகள் எதிர்கொண்ட கொடுமையான அவல வாழ்வையும், பெண்போராளிகளுக்கு நடைபெற்ற கொடுமைகளை கண்டுகொதித்து அந்தச் சிறையிலும் போராடிய ஒரு போராளியின் நினைவுகளையும், மனக்கண் முன்கொண்டு வந்தார்.
அதனைத் தொடர்ந்து, அண்மையில் வெளியான சன்னத்தின் சுவடுகள் என்ற முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த கவிதைப்புத்தகத்தைபடைத்து, சிட்னியில் வெளியிட்டு வைத்த நூலின் ஆசிரியர் நிஜத்தடன் நிலவனின் படைப்பில், நாட்டிய நடனம் இடம்பெற்றது.
இந்நாட்டிய நடனம் முள்ளிவாய்க்கால் மண்ணில் காவு கொள்ளப்பட்ட மனித ஆத்மாவின் கதையை எடுத்தியம்புவதாக அமைந்திருந்தது. இறுதியாக தேசியக்கொடிகள் இறக்கலுடன், இரவு 8.00 மணியளவில் நிகழ்வு நிறைவடைந்தது.

No comments:

Post a Comment