April 28, 2015

நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழுதும் மடல்!

நேபாள நாட்டு மக்களுக்கு இதய வலியோடு எழும் மடல் இது. உலகில் ஒரேயொரு இந்து நாடு என்ற பெருமைக்குரிய நேபாள நாட்டில் நடந்த பெரும் துயர் அறிந்து ஈழத் தமிழ் மக்களாகிய நாம் தாளாத வேதனை கொள்கிறோம்.
இழப்புகளின் துயரம் எத்தகையது என்பதை கணப்பொழுதும் அனுபவித்து வரும் ஈழத் தமிழ் மக்கள், உங்களுக்கு ஏற்பட்ட இழப்பின் கொடூரம் கண்டு கண்ணீர் வடிக்காமல் இருக்க முடியாது.
இயற்கையின் சீற்றத்தால் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இழந்து தவிக்கும் உங்களின் அவலநிலையை அந்த இறைவன் ஆற்றுப்படுத்த வேண்டும் என இந்நேரத்தில் உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்திக்கின்றோம்.
நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம் என்பதற்கு அப்பால் அநாதரவாகிப் போன குழந்தைகள், விதவைகளாகிப் போன பெண்கள், அங்கவீனமானவர்கள் என்ற மிகப் பெரியதொரு பட்டியலையும் நிலநடுக்கம் தந்துவிட்டுப் போயிருக்கும்.
என்ன செய்வது! இனத்தால், மதத்தால், மொழியால், நிறத்தால் மனித சமூகம் பேதமைப்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி அழித்து மனித வாழ்வை அர்த்தமற்றதாக்கி வருகின்ற துயர் மாறாத நிலையில், இயற்கையும் தனது பங்கிற்கு அமைதியான உங்கள் நேபாள நாட்டில் கோரத்தாண்டவம் ஆடி  நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை இரையாக்கியதுடன் தேசத்தையும் நாசமாக்கியுள்ளது.
ஓ! அன்புக்குரிய நேபாள நாட்டு மக்களே! நாங்கள் ஈழத் தமிழர்கள். வாழத் துடித்து எல்லாவற்றையும் இழந்து நிற்கும் அப்பாவிகள்.
வன்னியில் எம் இனம் கொன்றொழிக்கப்பட்ட போது, சர்வதேசமே எங்களைக் காப்பாற்று என்று கையேந்தி மன்றாடியும் காப்பாற்றுவார் இன்றி துடிதுடித்துப் பலியாகிப் போன இனத்தின் எச்சங்கள் நாங்கள்.
உலகில் அமைதியை நிலைநிறுத்துவதற்காக சர்வதேசம் ஒன்று கூடி அமைத்த ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனினால் கைவிடப்பட்ட இனம்.
வாலியை வதம் செய்த இராமராக இந்தியா செயற்பட்ட போதும் இராமரை நம்பியிருந்த வாலி போல இந்தியாவை நம்பியிருந்த ஏழையினம் உங்கள் துயர் கண்டு இன்று கலங்குகிறது.
உயிரிழப்பின் வலிமை மிகவும் கொடுமையானது. கடவுளே! எப்படித்தான் நீங்கள் தாங்கப் போகிறீர்கள் என்ற ஏக்கம் இழப்பால் தவிக்கும் எங்கள் இதயத்தை கடுமையாகத் தாக்குகிறது.
உங்கள் இழப்பின் துயரில் எங்கள் கண்ணீரும் கலந்து கொள்கிறது. நாட்டில் வாழ உரிமையில்லாத ஓர் இனத்தின் கண்ணீர்தான் அந்த இனம் தரக்கூடிய அதி உயர்ந்த உதவி என்பதை இந்த நேரத்தில் சொல்லும்போது எங்கள் கண்கள் கலங்குகின்றன.
இது உங்கள் துயருக்காக அல்ல, எங்களுக்கென்று ஒரு நாடு இருந்திருந்தால் நாங்களும் உங்கள் துயர் துடைக்க விமானத்தில் உதவிப் பொருட்கள் அனுப்பியிருப்போம். என்ன உதவி தேவை என்று கேட்டிருப்போம்.
என்ன செய்வது எந்த வாகனம் வந்தாலும் என்ன தருவார் என்று ஏங்கும் அளவில் எங்கள் நிலைமை இருப்பதை நினைத்த போது கண்கள் கலங்கின.

No comments:

Post a Comment