March 20, 2015

ரணிலிற்கு எதிராக களத்தில் சரத்குமார்.!

பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹவின் இந்திய மீனவா்கள் தொடா்பாக வெளியிட்ட கருத்தைக் கண்டித்து வருகிற 23ம் திகதி இலங்கை தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இருப்பதாக அகில இந்திய சமத்துவ
மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடல் பகுதிக்குள் வந்து மீன்பிடித்தால், தமிழக மீனவர்களை சுடுவோம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ ஏற்கனவே தெரிவித்திருந்தார். தமிழகத்தில் அனைவரும் இந்த ரணிலின் பேச்சை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பிறகு ரணில் விக்கிரமசிங்ஹவை தொடா்பு கொண்டு பேசிய இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ‘‘இலங்கை பிரதமரின் பேச்சு சரியானது அல்ல, எங்களுக்கு வேதனையளித்துள்ளது என்று அவரிடம் தெரிவித்தேன். நான் சொன்னதை கவனமாக கேட்டு, ஒப்புக்கொண்டதை போல் தலையசைத்தார். பின்னர் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்’’ என்று இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த நிலையில், மீண்டும் அதே கருத்தை தெரிவித்து இருக்கிறார். இது நம்மை சீண்டி பார்ப்பதாகவே உள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய வெளிவிவகாரத்துறை மந்திரி தெரிவித்துள்ள கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாகவும், நான் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதை நிரூபிப்பதற்காகவும் அவர் இப்படி கருத்து தெரிவித்துள்ளார்.
இலங்கை, இந்தியாவுடன் சுமுக உறவு வைத்து கொள்வது போல் ஒருபுறம் நடித்துக்கொண்டு, மறுபுறம் பகையுணர்ச்சியுடன் தான் செயல்படுகிறார்கள். இந்திய இலங்கைக்கு இடையே மிக குறுகிய கடல் பகுதியில், பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்கும் போது எல்லை தாண்டுவது இயற்கையாக அமைந்து விடுகிறது.
இதற்கு சட்டப்பூர்வ நடவடிக்கை எச்சரிக்கை செய்யும் வசதிகள் எத்தனையோ இருந்தும் நாங்கள் மீனவர்களை சுடுவோம் என்று மீண்டும், மீண்டும் பயமுறுத்துவதை மத்திய அரசு சகித்து கொள்ளக்கூடாது. விக்கிரமசிங்ஹவை மத்திய அரசு கண்டிப்பதோடு, இலங்கையை கடுமையாக எச்சரிக்க வேண்டும்.
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹவின் ஆணவ பேச்சை கண்டித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தின் முன் வருகிற திங்கட்கிழமை காலை 10 மணிக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் சரத்குமாா் கூறியுள்ளாா்.

No comments:

Post a Comment