March 25, 2015

"மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா" வழிகாட்டுதலில் புதிய வரிகள் இல்லாத நிதி நிலை அறிக்கை- தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாராட்டு!

தமிழக சட்டமன்றத்தில் எந்த ஒரு புதிய வரிகளும் இல்லாத மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு கூடுதல் முன்னுரிமை கொடுத்து தாக்கல் செய்யப்பட்ட 2015-16ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை பாராட்டுக்கும் வரவேற்புக்குரியதாகும்.

மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் இந்திய மத்திய அரசு மாநிலங்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டிருக்கிறது என்பது விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 14வது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளால் மாநிலங்கள் கூடுதல் நிதிச்சுமையை எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் நிதிநிலை அறிக்கை விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக அண்ணா தி.மு.க. அரசு செயல்படுத்தி வரும் அத்தனை மக்கள் நலத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்திட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. மிகவும் பின் தங்கிய அரியலூர், பெரம்பலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது அப்பகுதியின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும். இந்தியாவிலேயே முதல் முறையாக பொருளாதாரம், புள்ளியியல் துறை, தமிழ்நாடு மின் ஆளுமை முகமையுடன் இணைந்து தர ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
இதுவரை இல்லாத வகையில் வேளாண்துறைக்கு முதல் முறையாக ரூ6,613.68 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது பாராட்டுக்குரியதாகும். அத்துடன் விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்ய ரூ25 கோடி ஒதுக்கீட்டில்'தமிழ்நாடு விதைகள் மேம்பாட்டு முகமை' என்ற புதிய அமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அறிவித்திருப்பது வேளாண் பெருமக்களுக்கு பக்க பலமாக இருக்கும். 
அதேபோல் காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட எத்தகைய முயற்சிகளை எடுத்தாலும் அவற்றைத் தடுக்க தமிழக அரசு சட்டரீதியான நடவடிக்கைகள் உட்பட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் அறிவித்துள்ளதற்கு இந்த பிரச்சனைக்காக தொடக்கம் முதல் போராடி வரும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் தொழில்துறை மேம்பாடு அடைய ஒற்றைச்சாளர முதலீட்டாளர் இணையதளம் தொடங்கப்படும் என்பதும் பாராட்டுக்குரியது.
அத்துடன் பள்ளி கல்வி துறைக்கு மிக அதிகபட்சமாக ரூ20,936.50 கோடியும் ஆதி திராவிடர் நலத்துணை திட்டங்களுக்கு ரூ.11ஆயிரத்து 274 கோடியும் ஒதுக்கீடு செய்து அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையிலான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது பாராட்டுக்குரியதாகும்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஆணைப்படி இந்த நிதி நிலை அறிக்கையில் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படாதது மிகவும் பாராட்டுக்குரியதாகும். 
புதிய வரிகளை விதிக்காததுடன் சில பொருட்களுக்கு வரி விலக்குகள் அளித்திருப்பதும் ஏழை எளிய சாமானிய மக்களின் நலனுக்கான அரசுதான் அண்ணா தி.மு.க. அரசு என்பதை நிரூபித்திருக்கிறது.
மேலும் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர் நலனுக்கு ரூ108.46 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதன் மூலம் முகாம்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதற்கும் தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடுமையான நிதிச்சுமை, மத்திய அரசின் வஞ்சிப்பு, நிதி குறைப்பு இவைகளுக்கு இடையேயும் மாணவர்களுக்கான நலத் திட்டங்கள், பெண்களுக்கான சமூக நலத் திட்டங்கள் என அனைத்து துறைகளுக்கும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையிலான நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது.
பண்ருட்டி தி.வேல்முருகன்
தலைவர்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி

No comments:

Post a Comment