மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று
பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகளில் யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்துமாறு கோரி போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினை மூடி மேற்கொள்ளப்பட்ட போராட்டம் பிரதேச செயலாளரின் உறுதிமொழியை அடுத்து திறக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுபற்று பகுதிகளில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக கடந்த காலத்தில் 18 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதுடன் பலர் அங்கவீனமான நிலையிலும் பொருளாதாரத்தினையும் இழந்துள்ளனர்.
யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் மக்கள் வாழும் பகுதிகளுக்குள் புகும் காட்டுயானைகளினால் பல்வேறு இழப்புக்களை இப்பிரதேச மக்கள் எதிர்கொண்டுவருவதுடன் தினமும் பயப்பீதியுடனேயே வாழ்ந்துவருகின்றனர்.
மிகவும் வறிய மக்கள் அதிகமாக வாழும் இப்பிரதேச மக்களில் அனேகர் தமது வாழ்வாதாரமான விவசாயம் மற்றும் காடுகளை நம்பியே உள்ளனர்.
இந்த நிலையில் யானைகளின் அட்டகாசம் காரணமாக தமது தொழிலை இழப்பதுடன் சிலவேளைகளில் உயிரை இழக்கும் நிலைக்கும் தள்ளப்படுகின்றனர். இது தொடர்பில் கடந்த காலங்களில் பல கூட்டங்கள் நடாத்தப்பட்ட நிலையிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையிலேயே உள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் வெல்லாவெளியில் உள்ள போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தினை மூடி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கைக்குழந்தைகளையும் ஏந்தி பெருமளவான பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை வேதனைக்குரிய விடயமாகும்.
“யானைகளுக்கு அளிக்கும் மதிப்பினை மனிதர்களுக்கு வழங்காத” நிலையே இந்த நாட்டில் உள்ளதாக கண்ணீருடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் ஆகியோர் கலந்துகொண்டதுடன்,
இறுதியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஞா.கிருஸ்பிள்ளையும்,மா.நடராசாவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டனர். பொதுமக்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
|
No comments:
Post a Comment