அன்பான விபூசிகா!
உனக்கு இழைக்கப்பட்ட அநியாயம் தந்த துயரத்தில் நான் எழுதிய முதல் கடிதத்தை நீ படித்திருப்பாயோ தெரியவில்ல.
உனது உலகத்தில் இப்படியான கடிதங்களுக்கு நேரமில்லை என்பதும் எனக்குத் தெரியும் மகளே. அண்ணாவையும் அம்மாவையும் அநாதரவாகப்போன உன் வாழ்வையும் எண்ணி நீ விடும் கண்ணீரே உனக்குச்
சிறையானதடி சிறுவர்களை சிறுவர்களாகவே வாழ்வை அனுபவிக்க விட வேண்டும் என்பார்கள்.ஆனால் உனதும் உன்போன்ற ஏராளம் சிறுவர்களதும் வாழ்க்கை அரசியலிலும் போரிலும் சிதையுண்டதை எண்ணி என் மனம் சிதைகிறது.
11 மாதங்களுக்கு பின் கடந்த திங்கட்கிழமை உன் அம்மாவைப் பார்க்க நீ மகசீன் சிறை சென்றாய். நீண்ட நேரக் காத்திருப்பின் பின்னர் மாலை 4 மணியளவில்தான் உன்னை ப் பெற்றவளை பார்க்கச் சிறை அதிகாரிகள் அனுமதித்திருக்கிறார்கள்.
பாடசாலை விட்டு வரும் பிள்ளை தன் தாயை வாசலில் கண்டதும் ஓடோடி வருமே. அது போன்ற ஒரு வாழ்வு உனக்கு வாய்க்கவில்லையடி மகளே. அம்மாவைப்பார்க்க பிள்ளையைச் சிறை வாசலில் தவம் கிடக்க வைத்திருக்கிறது இலங்கையின் அரசு.
11 மாதங்கள் உன் அம்மாவும் நீயும் அடக்கி வைத்திருந்த உணர்வுகளை கொட்டிய போது மகசீன் சிறைச்சாலயின் எல்லாச் சடப்பொருடகளும் கண்ணீர் சொரிந்ததாகக் கண்டவர்கள் கூறிக் கலங்குகிறார்கள்.
ராஜபக்ஸ அரசால் வஞ்சிக்கப்பட்டுப் பூசாவுக்குள் தூக்கி எறியப்பட்ட உன் அம்மா ஜெயக்குமாரியை எலிகளும் கூட விட்டு வைக்கவில்லையே. எலிகள் கடித்த காயங்களோடு உன்னைத் தழுவிக்கொண்ட தாயின் துயரங்களை எப்படி அம்மா எழுத்தில் வடிப்பது?
மகனை இழந்த குற்றத்திக்காக உன் அம்மா சிறைக்குள் வீசப்பட்டு உன்னையும் இழந்து நிற்கிறாள். நீ என்ன குற்றம் செய்தாய் அண்ணாவையும் அம்மாவையும் இழக்க?
தமிழ்த் தேசியத்தின் பேரால் இங்கு என்னென்ன மோவெல்லாம் நிகழ்கிறது.
கடைகடையாக வியாபரம் செய்கிறார்கள். காசு சேர்க்கிறார்கள். சினிமா நடிகைகள் வருகிறார்கள். கோபிநாத் வருகிறார். பட்டிமன்றப் பேச்சாளர்கள் வந்து பிளந்து கட்டுகிறார்கள். அரசியற் கட்சி கூட ஆரம்பிக்கிறார்கள்.
மாவீரர் தினம் கூட ஒரு பூ, ஒரு சுட்டி, ஓராயிரம் கோடி கண்ணிர்த்துளிகள் என இதயவாழத்தில் இருந்து வராமல் ஒய்யாரமாகப் பல லட்சம் பணச் செலவில் பளபளப்பான மண்டபங்களில் நடக்கிறது.
எங்களிற் பலருக்கு தமிழ் தேசியத்தோடு நான் பயணிக்கிறேன் என்று இடைக்கிடை சொல்லாவிட்டால் பொச்சம் தீராது. உண்மையிலும் தேசியத்தோடு பயணித்த உங்களுக்குச் சிறை.
கடந்த பல மாதங்களாக நாங்கள் சுப்பர் சிங்கரில் மூழ்கி விட்டோம் பெண்ணே. இன்று அதுவும் முடிந்து போகிறது. அழகுப் போட்டிகளில் அழகுராணிகளாவதும், பாடற் போட்டிகளில் பாடகர்களாவதும் அவரவர் விருப்பும் உரிமையும் முயற்சியும் அதில் தலையிடுவது சனநாயகமல்ல. ஆனால் அப்படிப்பட்ட போட்டிகளில் எல்லாம் தமிழ்த்தேசிய உணர்வுடன் வீறுகொண்டு எழுந்து போர்களப்பாணியில் தொலைபேசியை எடுத்துக் குறுஞ் செய்திகளைச் சுட்டுத்தள்ளும் போதுதான் விபூசிகா உன் நினைவு வந்து தொலைக்கிறது.
உன் அழகும் உள்ளுறை படைப்பாற்றல்களும் துயரத்தின் சிறையில் முடக்கப்பட்டிருக்கிறதே. இதே உலகத்தில் தானே ஏனைய சிறுவர்கள் ஆடியும் பாடியும் கொண்டிருக்கிறார்கள். ஏனிந்த ஓர வஞ்சனை?
No comments:
Post a Comment