தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து பயணித்ததால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல ஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் பிரசாரத்திற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருச்சியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த 3 நாட்களாக மருத்துவப் பரிசோதனைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த திருமாவளவனை ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ள திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு உடல்நலனை விசாரித்தார். இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா, தமிழக முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கணேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.என்.சேகரன், முன்னாள் திருச்சி துணை மேயர் அன்பழகன், தேசிய லீக் கட்சியின் தலைவர் தாவூத் மியான்கான்
ஆகியோர் அவரை திருச்சி காவேரி மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இதேபோன்று ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று முன்தினம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் தா.பாண்டியன் திருச்சிக்கு வந்தார். காய்ச்சல், சளி காரணமாக அவதிப்பட்ட அவர், புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
No comments:
Post a Comment