யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து ரயில் கடவைகள் சரியாக நிர்வகிக்கப்படாத காரணத்தால் மக்கள் விபத்தினால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் அசமந்த போக்கே காரணமென பா.உறுப்பினர்
சி.சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளதுடன், கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.
நேற்று யாழ்ப்பாணம் பிறவுண் வீதி அன்னசத்திரசந்திப் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் கோப்பாயை சேர்ந்த யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவனான வ.குகப்பிரியன் ரயிலினால் மோதுண்டு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்படியான ரயில் விபத்துக்கள் மேலும் வடபகுதியில் ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது.
கடந்த ஆண்டுகளில் யாழ்ப்பாணத்துக்கான புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும் ரயில் சேவையை நடத்தும் போது கவனிக்க வேண்டிய மிக முக்கியமாக கடவைகளை சரியாக நிர்வகிக்கும் பணியை செய்ய ரயில்வே அதிகாரிகளும் ரயில்வே திணைக்களமும் தவறிவிட்டதுடன் மனித உயிர்களுடன் விளையாடுகின்ற மிகமோசமான அசமந்தப்போக்கை கொண்டிருக்கின்றது.
தேர்தல் காலங்களில் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்காக கடந்த அரசாங்கத்தால் அவசர அவசரமாக தொடக்கப்பட்ட இந்த ரயில் சேவை பல உயிர்களை வடபகுதியில் காவு கொண்டுள்ளதுடன் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகவும் காரணமாக இருந்திருக்கின்றது.
வடபகுதியில் அநேகமாக கிராமங்களை ஊடறுத்து செல்லும் இந்த ரயில் பாதைகளின் குறுக்கே ஏராளமான கடவைகள் உண்டு. ஆனால் இந்த கடவைகளை நிர்வகிக்கும் பணியாளர்கள் அங்கு இல்லை.
கடவைகளின் அருகே ரயில் வரும் வரை யாருக்கும் ரயில் வருவது தெரியாமலேயே உள்ளது. கடவைகளின் ஊடாக பயணிக்கும் வயோதிபர்கள் சிறுவர்கள் செவிப்புலனிழந்தோர் விழிப்புலனிழந்தோர் என ஏராளமானவர்கள் ரயில் கடவைகளை உயிர் பயத்துடனேயே கடக்க வேண்டிய நிலை வடபகுதியில் காணப்படுகின்றது.
எனவே, இந்த நிலையை மாற்றி வடபகுதியில் உள்ள ரயில் கடவைகள் பாதுகாப்பான ரயில் கடவைகளாக ஆக்கப்படவேண்டும்.
அத்துடன் இந்த கடவைகளுக்கு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அது நிர்வகிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி ரயில்வே அமைச்சருக்கு அவசர கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
No comments:
Post a Comment