August 23, 2014

மோட்டார் சைக்கிளில் பயணித்தவரை 22 மீற்றர் தூரம் இழுத்துச் சென்ற ரயில் (செய்தித் துளிகள்)!

மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த நபர் ரயிலில் மோதி 22 மீற்றர் தூரம் இழுத்து்ச செல்லப்பட்ட சம்பவம் இன்று புத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

மதுரங்குளி கரிக்கட்டை பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையில், கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி சென்ற புகையிரத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் 22 மீற்றர் தூரத்துக்கும் இழுத்துச் செல்லப்பட்டு தூக்கி வீசப்பட்டுள்ளார்.
அத்துடன், அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் 174 மீற்றருக்கும் அப்பால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவத்தில் மதுரங்குளி விருதோடைக் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது நிஜாம் முகம்மது முபாஸ் (வயது 25) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு- மட்டக்களப்பு கடுகதி ரயில் காட்டு யானையுடன் மோதுண்டு தடம்புரள்வு
மட்டக்களப்பிலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இரவு நேர கடுகதி புகையிரதம் ஹபரண பழுகஸ்வௌ காட்டுப் பகுதியில் காட்டு யானைகளுடன் மோதுண்டதில் தடம்புரண்டுள்ளதாக புகையிரதப் பகுதியினர் தெரிவித்தனர்.
நள்ளிரவு 12 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
புகையிரதம் தடம் புரண்டதில் புகையிரதப் பெட்டிகளுக்கு பாரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை ஆயினும் என்ஜினும் இரண்டு பெட்டிகளும் தண்டவாளத்திலிருந்து விலகியுள்ளதாக பழுகஸ்வௌ புகையிரத நிலைய அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை, பயணிகளுக்கு உயிரிழப்போ படுகாயங்களோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் மோதுண்ட காட்டு யானை ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளது
திருத்த வேலைகள் ஏற்கெனவே அரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்லோயா ரயில்வே பகுதி அறிவித்துள்ளது.
புகையிரதம் தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கான புகையிரத சேவை தாமதம் அடைந்துள்ளதாக புகையிரதப் பகுதி
அறிவித்துள்ளது.
சேவையை ஸ்தம்பிதமடையாது மாற்று ஏற்பாடாக நேற்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு நோக்கி வந்த பயணிகள் கல்லோயா விலுள்ள இழுவை
என்ஜின் பொருத்தப்பட்ட பெட்டிகளுக்கு மாற்றப்பட்டு மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று விபத்துக்குள்ளான புகையிரதத்தில் கொழும்பு நோக்கிச் சென்ற பயணிகளும் பழுகஸ்வௌவில் வைத்து கொழும்பு மாகோ இழுவை என்ஜின் பொருத்தப்பட்ட பெட்டிகளில்
மாற்றப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புகையிரத சேவையில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இன்றைய (சனிக்கிழமை) தினம் புகையிரத சேவையில் பயணிகளுக்கு அசௌகரியம் ஏற்படக் கூடும் என்று மட்டக்களப்பு
புகையிரத நிலைய அதிபர் முஹம்மட் ஹில்மி தெரிவித்தார்.
வழமையாக காலை 7.15 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்படும் கடுகதி புகையிரதம் இன்றைய தினம் காலை 11 மணியளவிலேயே புறப்படும் என்றும் அவர்
தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையால் 300 குடும்பங்களுக்கு பாதிப்பு
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 300 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 267 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கடும் காற்று காரணமாக திருகோணமலையில் 35 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்துள்ளார்.
காலி ஜின் கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை காலி, மாத்தறை மாவட்டங்கள், மத்திய, சபரகமுவ மாகாணங்களில் கனமழை பெய்யக் கூடும் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சில இடங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் கூறியுள்ளது

No comments:

Post a Comment