July 13, 2016

வெளிநாட்டுப் பங்களிப்பு என்பது வெளிநாட்டு நீதிபதிகள் அல்லவாம் – மங்கள சமரவீர குத்துக்கரணம்!

விசாரணைப் பொறிமுறைகளில் வெளிநாட்டுப் பங்களிப்பைப் பெறுவதென்பது, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதாக அர்த்தமாகாது என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர.


பிபிசி சிங்கள சேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“எமது தேர்தல் அறிக்கையில், உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது. நாம் அதனை உருவாக்கும் செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளோம்.

ஆனால், அதில் வெளிநாட்டு பங்களிப்பு இருக்கக் கூடும். வெளிநாட்டு பங்களிப்பு என்பது சிறிலங்காவுக்கு அந்நியமான ஒன்று அல்ல.

நாங்கள் நிபுணத்துவம் பெற்றிருக்காத சில விடயப் பரப்புகளில்,  வெளிநாட்டுத் தரப்புகளின் உதவியை நாம் கோர வேண்டியுள்ளது.

இங்கு வெளிநாட்டுப் பங்களிப்பு என்பதற்கு, வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கப் போகிறோம் என்று அர்த்தமாகாது.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளுக்கு வெளிநாட்டுப் பங்களிப்பை பெற்றிருந்தோம்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமளிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என்று முன்னதாக மங்கள சமரவீர கூறியிருந்த நிலையில், உள்நாட்டு விசாரணைகளில் தலையீடு செய்ய வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிக்கமாட்டேன் என்று சிறிலங்கா அதிபர் கடந்த வாரம் உறுதிபடத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, வெளிநாட்டு நீதிபதிகள் என்பது வேறு, வெளிநாட்டு பங்களிப்பு என்பது வேறு என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment