கிளிநொச்சியில் படையினரால் நடத்தப்படும் நிகழ்வுகளுக்குப் பாடசாலை மாணவர்களைப் பங்கேற்க அனுமதிக்குமாறு அதிபர்களை வற்புறுத்தி படையினர்
மாணவர்களை அழைத்துச் செல்கின்றனர் எனக் கூறப்படுகின்றது.
இராணுவத்தினரின் இத்தகைய அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு:-
படையினரின் ஏற்பாட்டில் நடக்கும் நிகழ்வுகளில் மாணவர்களைப் பங்கேற்க அனுமதிக்குமாறு பாடசாலை அதிபர்களிடம் படையினர் கேட்கின்றனர். வலயக் கல்வி அலுவலகத்தின் அனுமதியைப் பெற்றதன் பின்னரே மாணவர்களை அனுப்பி வைக்க முடியும் என அதிபர்கள் கூறினாலும் அதனை ஏற்காது படையினர் அச்சுறுத்தும் விதத்தில் நடப்பதுடன், மாணவர்களைத் தம்முடன் வற்புறுத்தி அழைத்தும் செல்கின்றனர். இந்த விடயம் குறித்து நேற்றுப் புதன்கிழமை கிளிநொச்சியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எம்மிடம் அதிபர்கள் முறையிட்டுள்ளனர்.
படையினரின் இத்தகைய நடவடிக்கைகளினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், செல்லும் வழியில் மாணவர்களுக்கு ஏதாவது விபத்து ஏற்படுமாயின் அவர்களின் பெற்றோர் சட்ட நடவடிக்கைகள் எடுப்பதன் மூலமாக குறித்த பாடசாலையின் அதிபர் வேலையை இழக்கவும் நேரிடும். இதன்போது குறித்த படையினர் தமக்கு உதவுவார்களா என்று அதிபர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.
பாடசாலைகளின் செயற்பாடுகளில் படையினர் இவ்வாறு அநாவசியமாக தலையிடுகின்றமையையும், மாணவர்களை வெளியில் அழைத்துச் சென்று அவர்களின் கல்வியைச் சீரழித்து, எதிர்காலத்தை வீணாக்குவதையும் மட்டுமின்றி அதிபர்கள் பதவி இழக்கக்கூடிய ஆபத்தையும் ஏற்படுத்துவதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment