மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர்கள், உயர்நிலைக்குழு, ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (29.05.2014 வியாழக்கிழமை) காலை சென்னை, தாயகத்தில்
நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:
தீர்மானம் எண் 1
இந்திய நாட்டின் ஜனநாயக ஒளி உலகம் வியக்கப் பிரகாசிக்கிறது. 1977 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், காங்கிரÞ அல்லாத ஒரு அரசியல் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்றது இல்லை. 16 ஆவது இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களின் அலை ஓங்கி எழுந்ததால், பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களையும், தேசிய ஜனநாயகக் கூட்டணி 336 இடங்களையும் பெற்றது பிரமிக்கத்தக்க சாதனை வெற்றி ஆகும்.
கடந்த பத்து ஆண்டுக் காலமாக இந்திய ஆட்சி பீடத்தில் இருந்த காங்கிரÞ கட்சி மீண்டும் எழ முடியாத படுதோல்வியைச் சந்தித்ததோடு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி என்ற தகுதியைக் கூடப் பெற முடியவில்லை. ஈழத்தமிழ் இனத்திற்கு மன்னிக்க முடியாத துரோகமும், தாய்த்தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கு வஞ்சகமும் புரிந்த காங்கிரÞ கட்சியின் வீழ்ச்சி, தமிழர்களுக்கு மனமகிழ்ச்சி.
எளிய குடும்பத்தில் பிறந்து, ஒரு துறவியாகவே வாழ்ந்து, தனது தலைமைப் பண்பை நாட்டின் கோடானுகோடி மக்கள் மனதில் பதிய வைத்து, உன்னதமான வெற்றியை ஈட்டி, இந்தியாவின் 15 ஆவது பிரதமராகப் பொறுப்பு ஏற்று உள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 2
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா கட்சி தலைமையில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்கு அளித்து வரலாற்றுச் சிறப்புக்குரிய வெற்றியை வழங்கிய இந்திய நாட்டின் வாக்காளப் பெருமக்களுக்கும், தமிழ்நாட்டில் அக்கூட்டணியில் இடம் பெற்று இருந்த மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கு, 75 இலட்சத்து 24 ஆயிரம் வாக்குகளை வழங்கிய தமிழக வாக்காளர்களுக்கும் இக்கூட்டம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 3
நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்ற நரேந்திரமோடி அவர்கள், மே 26 ஆம் நாள் பிரதமராகப் பொறுப்பு ஏற்ற நிகழ்வு, இந்திய ஜனநாயகத்திற்கு மகுடம் சூட்டி இருக்கின்றது.
சமுதாயத்தின் அடித்தட்டுக் குடும்பத்தில் பிறந்து, தொண்டராக உழைத்து உயர்ந்து, இந்தியாவின் தலைமைப் பொறுப்பை நரேந்திர மோடி ஏற்கின்ற இனிய நாளில், உலகெங்கும் வாழுகின்ற தமிழர்கள் நெஞ்சில் நெருப்பை அள்ளிக் கொட்டுவதைப் போல, இலட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்த இனப் படுகொலையாளன் இராஜபக்சே பங்கேற்க இருப்பதை அறிந்தவுடன் வேதனையில் துடித்த பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், மே 23 ஆம் நாள் நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்தார்.
‘இரத்தக் கறை படிந்த இராஜபக்சே இந்தியாவுக்கு வருகை தரும் செய்தி எங்களைப் பேரிடியாகத் தாக்குகிறது. பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிறுத்தப்பட வேண்டியவன், புகழ்மிக்க உங்களுடைய பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க அனுமதிக்கக் கூடாது. கொலைகார இராஜபக்சே வருகையைத் தவிர்த்து விடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்ற போர்வையில் இராஜபக்சேயின் வருகை உறுதியானதும், அக்கொலைகாரனின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மே 26 ஆம் நாள் டெல்லி ஜந்தர் மந்தரில் கருப்புக்கொடி அறப்போர் நடைபெறும் என்று பிரகடனம் செய்தது மட்டும் அன்றி, அறிவித்த 48 மணி நேரத்தில் அதற்கான ஏற்பாடுகளையும் திட்டமிட்டு மேற்கொண்டு, வெற்றிகரமாக நடத்திக் காட்டி, தாய்த் தமிழகம் மட்டும் அன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களின் நன்மதிப்பையும் பாராட்டுகளையும் பெற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு இக்கூட்டம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 4
இந்திய அரசியலில் புரையோடிப் போயிருக்கின்ற ஊழலின் ஊற்றுக்கண்ணாகத் திகழும் கருப்புப் பணம், ஊழல் திமிங்கலங்களால் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை மீட்டுக்கொண்டு வர வேண்டுமென, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் தாக்கல் செய்த பொதுநல வழக்கில், 2011 ஆம் ஆண்டு, ஜூலை 4 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், கருப்புப் பண மீட்புக்காக உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவரை நியமித்து, ஒருவரைத் தலைவராகவும், மற்றொருவரைத் துணைத்தலைவராகவும் கொண்டு, சிறப்புப் புலனாய்வுக்குழுவை அமைக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு ஆணை பிறப்பித்தது.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, காங்கிரÞ தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.
மீண்டும் ஒரு மறு ஆய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்தது. அதனை எதிர்த்து, வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள், தாம் ஐரோப்பிய நாடுகளில் திரட்டிய ஆவணங்களைக் கொண்டு வாதங்களை எடுத்து வைத்தார். அவருக்குப் பாராட்டுத் தெரிவித்த உச்சநீதிமன்றம், 2014 மே 1 ஆம் தேதி, மத்திய அரசின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்தது; மே 4 ஆம் தேதி பிறப்பித்த மற்றொரு ஆணையில், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை மே 28 ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்றும் அறிவித்தது.
ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தருணத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, உச்சநீதிமன்ற ஆணையை திரும்பப் பெறுமாறு ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.
இதன்மூலம், இந்திய நாட்டின் கோடானுகோடி செல்வத்தைக் கொள்ளையடித்து வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்துள்ள ஊழல் பெருச்சாளிகள் யார் என்பது வெட்டவெளிச்சம் ஆகிவிட்டது.
மே 26 ஆம் தேதி அன்று மாலை ஆறு மணி அளவில் நரேந்திர மோடி பிரதமராகப் பதவி ஏற்றார். 27 ஆம் தேதி கூடிய அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே மிகவும் மெச்சத்தக்க முடிவு எடுக்கப்பட்டது. கருப்புப் பணத்தை மீட்க, உச்சநீதிமன்ற ஆணையின்படி ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில், சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதன் துணைத்தலைவராக உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அர்ஜித் பசாயத் பதவி வகிப்பார். வருவாய் உளவுப் பிரிவு இயக்குநர், போதைப் பொருள் தடுப்புத்துறையின் இயக்குநர், பொருளாதார உளவுப் பிரிவின் இயக்குநர், மத்திய நேரடி வரி விதிப்பு வாரியத்தின் இணைச் செயலர் ஆகியோரும் இந்தக் குழுவில் இடம் பெறுகிறார்கள்.
மத்திய புலனாய்வுக்குழுவின் (சிபிஐ) முன்னாள் இயக்குநர் அமர் பிரதாப் சிங், ‘29 இலட்சத்து 50 ஆயிரம் கோடி ஊழல் பணம் வெளிநாடுகளில் முடக்கப்பட்டு உள்ளது’ என்று 2012 ஆம் ஆண்டில் கூறினார். அண்மையில் வெளியான பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, ‘91 இலட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கின்றது’ என்ற வாதத்தை ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் எடுத்து வைத்தார்.
கருப்புப் பணம் தொடர்பாக நடைபெற்று வருகின்ற வழக்குகளைத் துரிதப்படுத்தவும் நடவடிக்கையை சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொள்ள இருக்கிறது.
‘இந்தியப் பொருளாதாரத்தைப் பாழ்படுத்தும் கருப்புப் பணத்தை மீட்பேன்’ என்று, தேர்தல் பிரச்சாரத்தில் தான் கூறியதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது முதல் அமைச்சரவைக் கூட்டத்திலேயே நிறைவேற்றியதற்கு, இக்கூட்டம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் எண் 5
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஆதிபத்திய உரிமையுடன், அனுபோக பாத்தியதையாக நதிகளின் தண்ணீரைப் பயன்படுத்தும் மாநிலங்களின் உரிமைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படக்கூடாது. இது உலக நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ள நியதி ஆகும்.
ஆனால், தமிழகத்திற்கு அனைத்து உரிமையும் உள்ள முல்லைப்பெரியாறு நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் பெற்று வந்த உரிமையை மறுக்கும் விதமாக, 152 அடி உயரத்திற்குத் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர், கேரள மாநிலத்தின் அநீதியான போக்கால், அணை உடையும் என்ற பொய்ப்பிரசாரத்தால், நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. பிரச்சினை உச்சநீதிமன்றத்துக்குச் சென்றது.
இவ்வழக்கில், 2006 பிப்ரவரி 27 இல் உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை நிலைநாட்டித் தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பைக் காலில் போட்டு மிதித்த கேரள அரசாங்கம், ‘முல்லைப்பெரியாறு அணையை உடைப்பதற்கும் கேரள அரசுக்கு அதிகாரம் உண்டு; இதில் இந்தியாவின் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது’ என்று, இந்திய அரசின் இறையாண்மைக்குச் சவால் விடுத்து, கேரளச் சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றியது.
‘இச்சட்டம் மிகவும் தவறானது’ என்று கடும் கண்டனம் தெரிவித்து, 2014 மே 7 ஆம் நாள், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்ட ஐந்து நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு அளித்தது.
கேரள அரசு இந்திய இறையாண்மைக்கு எதிராகச் சட்டம் நிறைவேற்றியதைக் கண்டித்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கடமையில் தவறியதோடு, குதிரை கீழே தள்ளியதோடு குழியும் பறித்ததைப் போல, எந்த அக்கிரமமான சட்டத்தைக் கேரள அரசு நிறைவேற்றியதோ, அதே சட்டத்தை மத்திய அரசுச் சட்டமாகவே ஆக்குவதற்காக, மத்திய அரசுப் பணிகளில் உள்ள கேரளத்தினரின் சதிச்செயலுக்கு உடன்பட்டு, ‘அணைப் பாதுகாப்புச் சட்டம்’ என்ற மிகக் கேடான ஒரு சட்டத்தை நிறைவேற்ற முனைந்து, அணைப் பாதுகாப்பு மசோதாவை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரைந்தது.
கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அன்றைய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை நேரில் சந்தித்து, அணைப் பாதுகாப்பு மசோதா சட்டம் ஆக்கப்பட்டால், அது இந்திய ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்க வழி வகுக்கும் எனக் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
ஒரு மாநிலத்தில் கட்டப்பட்டு உள்ள நீர்த்தேக்கங்கள் குறித்து, அம்மாநிலமே எந்த முடிவும் எடுத்துக் கொள்ளலாம் என்ற அந்தத் தீங்கான அணைப் பாதுகாப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதைக் கைவிட வேண்டும் என்றும், ரத்துச் செய்ய வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளைப் போன்று, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகளை, தேசிய நதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் நரேந்திர மோடி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 6
இந்தியாவில் உள்ள கோடானுகோடி விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும், வேளாண் நிலங்கள் பாசனம் பெறவும், மக்கள் பருகுவதற்குக் குடிதண்ணீர் பெறவும் வழிவகுக்க, மாநிலங்களுக்கு இடையே ஓடுகின்ற நதிகள் இணைக்கப்பட வேண்டும்.
‘கங்கை-காவிரி இணைப்பு என்பது நிறைவேற்ற இயலாதது’ என நிபுணர்கள் தந்த அறிக்கையின் பேரில், 40 ஆண்டுகளுக்கு முன்பு அத்திட்டம் கைவிடப்பட்டு விட்டது.
தற்போது இந்தியாவில் ஓடுகின்ற நதிகள், இமாலய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் எனவும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. இமாலய நதிகள் இணைப்பிற்கும், தீபகற்ப நதிகள் இணைப்பிற்கும் திட்டம் வகுக்க வேண்டும் என, 2002 ஆம் ஆண்டு, கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாக்கல் செய்த தனிநபர் மசோதாவுக்கு, தி.மு.க. மார்க்சிÞட் கம்யூனிÞட் கட்சி, தவிர்த்து, அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்கள், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு முனைப்பாக ஏற்பாடுகளைச் செய்தார்.
2004 ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்தபோது, வைகோ அவர்கள் விளக்கமாகக் கொடுத்த அறிக்கை வாசகங்களையே பதிவு செய்து, அந்த அரசின் குறைந்தபட்ச செயல்திட்டத்தில், தீபகற்ப நதிகளின் இணைப்பிற்கு முன்னுரிமை கொடுத்துச் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அதனைச் செயல்படுத்த எந்த நடவடிக்கையையும் காங்கிரÞ அரசு மேற்கொள்ளவில்லை.
கடந்த மே 19 ஆம் நாள், திரு நரேந்திர மோடி அவர்களை வைகோ நேரில் சந்தித்து, ‘நதிகள் இணைப்புத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டபோது, ‘தனது அரசு அதைச் செயல்படுத்தும்’ என்று நரேந்திர மோடி அவர்கள் உறுதி அளித்தார்.
தீபகற்ப நதிகளை இணைக்கின்ற திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்கின்றது.
தீர்மானம் எண் 7
தமிழக அரசு, 2013-14 கல்வி ஆண்டில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்று முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைத் தொடங்குவதற்குத் திட்டமிட்டு, முதற்கட்டமாக ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்கியது. நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) இரண்டாம் வகுப்பிலும், ஏழாம் வகுப்பிலும் ஆங்கில வழிப் பிரிவுகளைத் தொடங்க உள்ளது.
இதன்மூலம், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழி நிலையில் இருந்து முற்றாக நீக்கிவிடும் போக்கில் தமிழக அரசு தீவிரமாகச் செயல்படுவது கண்டனத்திற்குரியது ஆகும். இந்நடவடிக்கை முழுக்கமுழுக்கத் தமிழ் மொழிக்கு எதிரானதாகும்.
தாய்மொழி வழிக் கல்வியை இழந்துவிட்டால், தமிழ் இனம் தனது அடையாளத்தையும் பண்பாட்டு விழுமியங்களையும் முற்றாக இழந்துவிடும் கேடு நேர்ந்துவிடும்.
எனவே, தமிழ் மொழிக்கு எதிரான, ஆங்கில வழி கல்வித் திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
No comments:
Post a Comment